திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பாம்பு கடிக்கு சிகிச்சைப் பெற்று வந்த விவசாயி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகேயுள்ள கலிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சேகராஜ். விவசாயியான இவரை கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி வீட்டு தோட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தப்போது, புதருக்குள் பதுங்கி இருந்த பாம்பு கடித்தது. இதனால் வலியால் அலறி துடித்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சேகராஜை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை கடித்தது கட்டுவிரியன் பாம்பு என்றும், இதனால் விஷம் அவருடைய கால் முழுவதும் பரவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 


இதனையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சேகராஜூக்கு மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் விஷத்தால் ஏற்பட்ட பாதிப்பு அவருக்கு குறையவில்லை என சொல்லப்படுகிறது. இதனிடையே நேற்று அதிகாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறிய சேகராஜ், அறுவை சிகிச்சை அறைக்கு செல்லும் வழியில் உள்ள இரும்பு கேட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.


அதிகாலை நேரம் என்பதால் மருத்துவமனையில் அந்த பாதையில் பொதுமக்கள், மருத்துவ பணியாளர்கள் நடமாட்டம் குறைவாக இருந்துள்ளதால், சேகராஜ் தற்கொலை செய்துக் கொண்டதை யாரும் கவனிக்கவில்லை. பின்னர் பொழுது விடிந்ததும் ஒருவர் தூக்கில் தொங்குவதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிவித்தனர். உடனடியாக நிர்வாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 


சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சேகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பாம்பு கடிக்கு சிகிச்சைப் பெற வந்த சேகராஜூக்கு விஷ பாதிப்பால் கால்களில் தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)