சென்னை, பல்லாவரத்தை அடுத்து அமைந்துள்ள பம்மல். இங்குள்ள ஐயப்பா நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். ( வயது 76) அவரது மனைவி சௌந்தரி ( வயது 66). இவர்களது மகன் ஸ்ரீராம் ( வயது 41). ஸ்ரீராமிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால், அவர்களது பெற்றோர்கள் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளனர். இருப்பினும், சீனிவாசன் நாளிதழில் தனது மகனுக்கு மணமகள் தேடுவதாக நாளிதழில் விளம்பரம் அளித்தார்.


இந்த விளம்பரத்தை பார்த்து, முதியவர் ஒருவர் சீனிவாசனை தொடர்பு கொண்டார். தனது உறவினர் பெண் ஒருவர் இருப்பதாகவும், ஆனால் மாப்பிள்ளைக்கு திருமணத்திற்கு முன்பு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறினார். இதற்காக, வீட்டில் உள்ள செம்பில் தண்ணீரை நிறைய ஊற்றி, மூன்று நாட்கள் வரை அதில் தங்க சங்கிலியை போட வேண்டும் என்றும், அந்த மூன்று நாட்கள் வரை அந்த செம்பில் உள்ள நீரை திறக்கவும் கூடாது, நீரை கீழே ஊற்றவும் கூடாது என்றும் கூறியுள்ளார்.




வயதான தம்பதியினரும் இதை நம்பி அவர் கூறியபடியே வீட்டில் இந்த பூஜையை செய்தனர். அந்த முதியவரும் உடனிருந்து அனைத்து பூஜைகளை செய்து கொடுத்துவிட்டு, அருகில் உள்ள குளத்தில் பூஜை பொருட்களை போட்டு விட்டு வருகிறேன் என்று சென்றுள்ளார். முதியவர் சென்று நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பாததால், வயதான தம்பதியினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக செம்பை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, செம்பில் அவர்கள் பூஜைக்காக போட்ட ஒன்றரை பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.


இதையடுத்து, உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரைப் பெற்ற போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது குற்றவாளியை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனென்றால், முதியவர்களை ஏமாற்றியவர் பிரபல திருடன் சில்வர் சீனிவாசன். வெள்ளிப்பொருட்களை மட்டுமே குறிவைத்து திருடுபவர். 84 வயதான சில்வர் சீனிவாசன் இதுவரை பல முறை வெள்ளிப்பொருட்களை திருடிய குற்றத்திற்காக போலீசாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.




பின்னர், போலீசாரிடமும் வசமாக சிக்கிக்கொள்வார். போலீசார் கேட்டவுடனே பொருட்களை எங்கு அடகு வைத்தார் என்ற முழு விவரத்தையும் கூறிவிடுவார். வெள்ளிப் பொருட்களை திருடுவதாலே இவருக்கு சில்வர் சீனிவாசன் என்று பெயர் உள்ளது. பார்ப்பதற்கு அப்பாவியான தோற்றமும், இனிமையான பேச்சுமே சீனிவாசனின் திருட்டிற்கு மிகப்பெரிய பலமாக இருந்து வந்துள்ளது. வெள்ளிப் பொருட்களை மட்டும் திருடும் சீனிவாசன் தற்போது, தங்க சங்கிலியை திருடியுள்ளார், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண