40 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம்..
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக செங்கல்பட்டு அருகே, சுமார் 40 ஆயிரம் லிட்டர் கள்ளச் சாராயம் கடத்தியவர்களை காவல்துறையினர் விரட்டி பிடித்தனர். கள்ள சாராயம் கடத்தி வந்த நபர்கள் காவல் துறையை கண்டவுடன் வாகனத்தை, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி விட்டு தப்பிச் சென்றனர். பல வருடங்கள் கழித்து, ஒரே நேரத்தில் 40 ஆயிரம் லிட்டர் கள்ளச் சாராயம் பிடிப்பட்டது செங்கல்பட்டு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு மாதம் சுற்றித்திரிந்த காவல்துறை
கள்ளச்சாராயத்தை கடத்தியவர்கள் யார், இதன் பின்னணியில் மிகப் பெரிய கும்பல் இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து, கலால் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஒரு மாத தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டைக்கு பிறகு நான்கு நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். 4 பேர் கைது நடவடிக்கை பின்னால் டெல்லியை சேர்ந்த மிகப் பெரிய கும்பல் இருப்பதும், சுமார் 25 ஆண்டுகாலம் இதேபோல நூதன முறையில் கள்ளச்சாராயத்தை கடத்தி வந்ததும் காவல்துறை நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் இருந்து கிளம்பிய சாராயம்
டெல்லியை சேர்ந்த சண்டு பாய் என்பவர் கரும்பு சக்கையை எடுத்து வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இதன் மூலம் அரியானா உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயத்தை உருவாக்கி, தென்னிந்தியாவில் பல பகுதிகளில் சாராய வியாபாரம், ஹோல்சேல் முறையில் செய்து வந்துள்ளார். அவருக்குக் கீழே 3 ஸ்டார் ஓட்டல் வைத்து நடத்தி வரும் பெங்களூரை சேர்ந்த லோகேஷ் என்பவர் வேலை செய்து வருகிறார். இவருக்கு சுமார் 100 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு இருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். லோகேஷ் புதுச்சேரியை மையமாகக் கொண்டு, சாராய வியாபாரத்தை செய்து வந்துள்ளார்.
கள்ளச்சாராயம் சிண்டிகேட்
வடஇந்தியாவிலிருந்து வரும் கள்ளச்சாராயத்தை தமிழ்நாடு எல்லை வரை பாதுகாப்பாக கொண்டு வந்து, புதுச்சேரியில் வசித்து வரும், மதுராந்தகம் பகுதியை சேர்ந்த வேலு செட்டி என்பவரிடம் ஒப்படைத்து விடுவார். இதனையடுத்து வேலு சட்டி தமிழ்நாட்டில் இருந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பாண்டிச்சேரிக்கு கொண்டு சேர்த்துவிடுவது வேலு செட்டியின் வேலையாக இருந்து வந்துள்ளது. அங்கிருந்து பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்த, ராஜா கள்ளச்சாராயத்தை பெற்றுக் கொண்டு, பாண்டிச்சேரி உள்ளூரில் வியாபாரம் மேற்கொள்வது வாடிக்கையாக உள்ளது. இதை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருவதாக காவல்துறை நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு லோடு 35 லட்சம்
ஒரு லோடு சுமார் 35 லட்ச ரூபாய் வரை விலை போகிறது. ஒரு லாரியில் லாபம் மட்டும் 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாதம் இரண்டு அல்லது மூன்று முறை , கள்ளச்சாராயத்தை இவ்வழியாக கடத்திச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக லாரியில் கள்ளச்சாராயம் செல்லும்பொழுது, முன்னே ஒரு வாகனம், பின்னே ஒரு வாகனம் என பாதுகாப்புடன் சென்றுள்ளது. இரும்பு கடையில் இருந்து பயன்படுத்த முடியாத லாரியை விலைக்கு வாங்கி, அதை சீர் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஹவாலா பணம்
பணமானது அனைத்தும் , ஹவாலா மூலமாகவே நடைபெற்று வந்துள்ளது. தொலைபேசி மூலம் பேசினால் யாராவது கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால், வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வந்துள்ளனர். நேரடியாக பணம் செலுத்தி கொள்ளாமல், ஹவாலா மூலம் என்பதால் காவல்துறையினர் கண்காணிப்பு வளையத்துக்குள் வராமலே இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்செயலாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் செங்கல்பட்டு அருகே வாகனம் சிக்கியதால் மிகப்பெரிய கும்பலின் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 25 ஆண்டுகளாக காவல்துறை வட்டாரத்தில் சிக்காமல் கள்ளச் சாராயம் கடத்திய வந்த கும்பலை, செங்கல்பட்டு காவல்துறையினர் கைது செய்து அசத்தியுள்ளனர்.
சார் காசு கொடுக்கிறேன் விட்டுடுங்க
சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தபோது காவல்துறையினரிடம், புஷ்பா திரைப்பட பாணியில் லட்சக்கணக்கில் பணம் தருவதாகவும் தங்களை விட்டு விடுங்கள் எனவும் கூறியுள்ளனர் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு பிரிவு காவல்துறையினர் இது தொடர்பாக, பெங்களூரை சேர்ந்த லோகேஷ், மதுராந்தகம் பகுதியை சேர்ந்த வேலு செட்டி, லாரி ஓட்டுனர் முருகன், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த கவியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னால் இருக்கும் அனைவரையும் கைது செய்ய தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்