பூமியில் மிகவும் கொடிய மற்றும் விஷமுள்ள உயிரினங்களில் முக்கிய இடத்தில் உள்ளது பாம்பு வகைகள். பாம்பு என்றால் படையும் என்பது ஊர் அறிந்த உண்மை. எவ்வளவு பெரிய தைரியசாலி, பலசாலியாக இருந்தாலும் பாம்பு முன் வந்தால் சிறு நடுக்கம் ஏற்பட்டு, உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை ஒரு சிலிர்ப்பை தரும்.  WHO (உலக சுகாதார அமைப்பின்) அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 81,000 முதல் 138,000 பேர் பாம்புக் கடியின் விளைவாக இறக்கின்றனர். 


அதேபோல், பாம்பு கடியால் பலரது வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டும் இருக்கிறது. ஆனால் சில சம்பவங்கள் மக்களை முற்றிலும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நேரங்களும் உள்ளன. இந்தநிலையில், ஈரோடு மாவட்டம் கோபி அருகே பாம்பு கடிப்பதுபோல் அடிக்கடி கனவு வந்ததால், ஜோதிடரை நம்பி அரசு அதிகாரி ஒருவர் நாக்கை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியை சேர்ந்தவர் 54 வயதான அரசு அதிகாரி. இவர் அரசு பணிநேரம் போக, மீதம் இருக்கும் நேரத்தில் தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்தநிலையில், இவருக்கு கடந்த சில மாதங்களாகவே பாம்பு ஒன்று கனவில் வந்து தூங்கவிடாமல் தொல்லை செய்து வந்துள்ளது. இதையடுத்து, தனது தினந்தோறும் பாம்பு கனவில் வருவது குறித்து தனது மனைவியிடம் கூறியுள்ளார். 


மனைவியின் ஆலோசனைப்படி, இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு ஜோதிடரை அணுகி இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பரிகாரம் செய்தால் பாம்பு கனவில் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறிய ஜோதிடர், ஈரோட்டில் உள்ள மாவட்டத்தில் உள்ள வேறு ஒரு ஜோதிடரை அணுக சொல்லியுள்ளார். 


இருவரும் இதுதொடர்பாக அந்த ஜோதிடரை சந்திக்கவே, அதற்கு அவர் கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் பாம்பை வைத்து நாகசாந்தி பூஜை செய்ய வேண்டும் என்றும், பூஜையில் இறுதியில் பாம்பின் முன் அந்த அரசு அதிகாரி நாக்கை நீட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். அனைத்து பூஜைகளும் முடிந்து அரசு அதிகாரி இரண்டு முறை நாக்கை நீட்டியுள்ளார். மூன்றாவது முறையாக நாக்கை நீட்டும்போது அந்த கண்ணாடி விரியன் பாம்பு திடீரென அவரது நாக்கை கடித்துள்ளது. 


இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஜோதிடர், முதலுதவி செய்கிறேன் என்ற பெயரில் கத்தியை எடுத்து அரசு அதிகாரியின் நாக்கை வெட்டியுள்ளார். இதனால் நாக்கு இரண்டு துண்டாக வெட்டப்பட்டு, அதிகளவு ரத்தம் வெளியேறியுள்ளது. அதிகளவு வலி ஏற்படவே அரசு அதிகாரி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. 


இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மெடிக்கல் சென்டரில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நபர் உயிர் பிழைத்தார். 






முன்னதாக, ஒரு பெண்ணின் காதில் சிறிய பாம்பு உள்நுழைந்து சிக்கிகொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.