ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் பகுதியில் வசிப்பவர் செல்வராஜ் (எ) டெல்லி செல்வராஜ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் பிறமொழிப் பிரிவின் முன்னாள் ஈரோடு மாவட்ட செயலாளர் இருந்துள்ளார். தற்போது பாஜகவில் உறுப்பினராக மட்டும் உள்ளார். செல்வராஜுக்கு இதுவரை திருமணமாகவில்லை, ‌தனியாகவே வாழ்ந்து வருகிறார். டெல்லியில் சேலைகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. செல்வராஜ் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் மற்றும் நகைகள், பணங்கள் அதிக அளவு இருந்த போதிலும் தனிமையிலேயே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து ஊர் திரும்பியவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடந்த 24 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் அக்கம்பக்கத்தினர் செல்வராஜின் உறவினரான கார்த்திக் என்பவருக்கு தகவல் அளித்துள்ளனர்.



தொடர்ந்து வீட்டுக்கு வந்த கார்த்திக் மற்றும் செல்வராஜின் ஓட்டுனர் சுரேஷ் ஆகிய இருவரும் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். ஆனால் கதவு திறக்கவே இல்லை. இதையடுத்து வீட்டின் மேல் ஏறி படிக்கட்டின் வழியாக உள்ளே சென்று பார்த்தபோது, தலைப்பகுதியில் இருந்து இரத்தம் வழிந்த நிலையில் செல்வராஜ் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக செல்வராஜ் இறப்பு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் பவானி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து வெள்ளித்திருப்பூர் போலீசார் சந்தேக மரண வழக்கு பதிவு செய்து செல்வராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் செல்வராஜன் கழுத்தில் கூர்மையான ஆயுதம் கொண்டு குத்தியும், கழுத்து இறுக்கப்பட்டதன் காரணமாக கழுத்து எலும்பு உடைபட்டும் உயிரிழந்தது தெரிய வந்தது, உடனடியாக போலீசார் சந்தேக மரண வழக்கை‍, கொலை வழக்காக மாற்றம் செய்து 3 தனிப்படைகளை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.


இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள புரவிபாளையம் பகுதியில் அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் போலீசாரை கண்டவுடன் தப்பித்து ஓட முற்பட்டவர்களை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் அதில் ஒருவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதால் மூவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்திய போது பாஜக‌ பிரமுகரை கொலை செய்தவர்கள் என்பது தெரிய வந்தது. 



தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள், அம்மாபேட்டை அடுத்துள்ள குருவரெட்டியூர் மேட்டுப்பாளையம் காலனி பகுதியைச் சேர்ந்த அசோக் (24), பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த திலீப் (20) மற்றும் ஒரு 15 வயதுடைய சிறுவன் என்பது தெரியவந்தது. இதில் அசோக் அம்மாபேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவர். இவர் மீது ஏற்கனவே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட வழக்கு உள்ளது. காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அசோக், ஒலகடம் பகுதிக்கு வந்து சென்ற போது பாஜக பிரமுகர் செல்வராஜை பார்த்துள்ளான். செல்வராஜ் கையில் உள்ள அனைத்து விரல்களிலும் மோதிரங்கள் இருந்ததையும், கழுத்தில் செயின் மற்றும் கையில் பிரேஸ்லெட் அணிந்து இருந்ததையும் பார்த்துள்ளான். பின்னர் செல்வராஜை பின் தொடர்ந்ததில் அவர் தனியாக வசித்து வருவதை கண்டுபிடித்துள்ளார்.


இதனையடுத்து அவரது வீட்டில் உள்ளே புகுந்து திருட திட்டம் தீட்டிய போது செல்வராஜ் டெல்லிக்கு சென்றது தெரியவந்தது. கடந்த இரண்டு மாதமாக அசோக் அடிக்கடி அப்பகுதியில் சுற்றி வந்துள்ளான். இந்த நிலையில் தான் செல்வராஜ் கடந்த 15 தினங்களுக்கு முன்பாக டெல்லியில் இருந்து ஊர் திரும்பியுள்ளார்‌. செல்வராஜ் ஊர் திரும்பியதை அறிந்த அசோக் கடந்த 22ஆம் தேதி தனது உறவினர்களான திலீப் மற்றும் 15 சிறுவன் நள்ளிரவு ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு ஒலகடம் பகுதிக்கு வந்துள்ளார். இதில் சிறுவன் இரு சக்கர வாகனத்துடன் வெளியே தயார் நிலையில் நிற்குமாறு கூறிவிட்டு அசோக்கும், திலீப்பும் செல்வராஜின் வீட்டின் மீது ஏறி படிக்கட்டு வழியாக வீட்டிற்குள் சென்றுள்ளனர். உள்ளே இருவரும் சென்றபோது சத்தம் கேட்டு எழுந்த செல்வராஜையை அசோக் துண்டைப் போட்டு கழுத்தை இறுக்கியுள்ளார். திலீப் அங்கிருந்த கத்தரிக்கோல் ஒன்றை எடுத்து செல்வராஜின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த செல்வராஜ் அப்படியே மயங்கி விழுந்து இறந்துள்ளார். உடனடியாக அசோக் மற்றும் திலீப் வீட்டில் நகைகளை தேடி அங்கிருந்த செயின் பிரேஸ்லெட் மற்றும் 5 மோதிரங்களை‌ எடுத்துக்கொண்டு வெளியே வந்து இரு சக்கர வாகனத்தில் தயார் நிலையில் இருந்த சிறுவனுடன் மூவரும் தப்பித்து சென்றுள்ளனர். மீண்டும் மூன்று பேரும் ஒன்றாக இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரியும்போது போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து 7.6 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து கோபிசெட்டிபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அசோக் மற்றும் திலீப்பை மாவட்ட கிளை சிறையிலும், சிறுவனை கோவையில் உள்ள சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.