சேலம் மாநகர் தாதகாப்பட்டியில் முன்னாள் கொண்டலாம்பட்டி மண்டல தலைவரும், அதிமுக பிரமுகமான சண்முகம் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யும் வரை உடலை எடுக்க மாட்டோம் என உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் காவல்துறையினர் குற்றவாளிகளை நிச்சயம் கைது செய்வோம் என உறுதி அளித்த நிலையில் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதற்கு அனுமதித்தனர். இந்த நிலையில் நேற்று காலை சண்முகத்தின் பிரேத பரிசோதனை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நடைபெற்றது. பிரேத பரிசோதனைக்கு பின்னரும் கொலையாளிகளை கைது செய்யவில்லை என கூறி உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிமுக நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்தனர். அதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட திமுக மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் உட்பட ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து உறவினர்கள் உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி சண்முகத்தின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். சண்முகத்தில் உடலை பார்த்த எடப்பாடி பழனிசாமி கண் கலங்கி நின்றார். தொடர்ந்து அதிமுக நிர்வாகி சண்முகத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "இருசக்கர வாகனத்தில் கட்சி அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியபோது அவரைத் தாக்கி படுகொலை செய்திருக்கிறார்கள். இது கடும் கண்டனத்துக்குரியது. நெஞ்சைப் பதற வைக்கும் செயல். அவரை படுகொலை செய்யும்போது தெருவிளக்குகள் அணைக்கப்பட்டிருந்துள்ளது. திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது. இந்த படுகொலைக்கு காரணமாக 55 வது வார்டு திமுக கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் என்று ஊடகத்தில் செய்தி வந்துள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. எங்களுடைய கட்சியின் முக்கியமான நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆரம்ப காலம் தொட்டு அதிமுகவில் இணைந்து பணியாற்றியவர். பொதுமக்களிடம் நன்மதிப்பு பெற்றவர். தேர்தல்களில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய நல்ல தொண்டர். 2 முறை கொண்டலாம்பட்டி மண்டலக்குழுத் தலைவராக பணியாற்றிய தொண்டரை கொடியவர்கள் கொலை செய்து அவருடைய குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தி விட்டனர்” என்றார்.



மேலும், ”திமுக ஆட்சியில் கொலைகள் நடைபெறாத நாளே கிடையாது. இந்த கொலை குற்றம் செய்தவர் அதே பகுதியில் போதைப் பொருள் விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் செய்ததால் தான் சண்முகம் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். சண்முகத்தை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.


பின்னர் அதிமுக பிரமுகர் சண்முகத்தின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.