கடலூர் விருத்தாசலம் அருகேயுள்ள குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், 2003ஆம் ஆண்டு புதுக்கூரை பேட்டையைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவரின் தங்கை கண்ணகியை பதிவுத் திருமணம் செய்துகொண்டார். கண்ணகி திருமணம் செய்துகொண்டது பெண் வீட்டாருக்கு தெரிந்ததால், அப்போதைய விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் கண்ணகியை முருகேசன் தங்க வைத்திருந்தார். கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்கள் 2003 ஜூலை 8ஆம் தேதி அன்று முருகேசனைப் பிடித்து வைத்தனர்.‌ மேலும் விழுப்புரம் மூங்கில்துறைப்பட்டில் கண்ணகி இருக்கும் இடத்தை அறிந்த அவரது உறவினர்கள், முருகேசன் பிடித்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு கண்ணகியை அழைத்து வந்தனர்.

 



 

பின்னர் முருகேசன், கண்ணகி ஆகிய இருவரையும் அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச்சென்று அவர்களை சித்திரவதை செய்து இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷம் செலுத்தி அவர்களைக் கொலை செய்து, சடலங்களை தனித்தனியாக எரித்தனர். இது சம்பந்தமான வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம் செப்டம்பர் 24ஆம் தேதி, கடலூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் இந்த ஆணவ கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரான கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனையும், மீதம் உள்ள 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

 



 

இந்நிலையில் குப்பநத்தம் கிராமத்தில் வசித்து வந்த முருகேசனின் தாய் சின்னப்பிள்ளை கடந்த வியாழன் மாலை 5.30 மணியளவில், தன் வீட்டின் வாசலில் இருந்தபோது சில நபர்களால் தாக்கப்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். முருகேசன் தாயார் சின்னப்புள்ளை மீது தாக்குதல் தொடர்பாக விருத்தாசலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆதி, வாக்குமூலம் பெற்று, அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்தார். அதில் அவர், 'சின்னப்பிள்ளையை புதுக்கூரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, வரதராசு, பாக்கியராஜ், சதீஷ்குமார், வெங்கடேசன், ராஜிவ் காந்தி, வினோத்குமார் ஆகியோர் தன்னை சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தையால் திட்டியும், கம்பால் அடித்தும் எட்டி உதைத்தும் தாக்கியதாக' வாக்குமூலம் அளித்தார்.

 



 

இதனடிப்படையில் ஆறு பிரிவுகளில் 7 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் இதுவரை இந்த வழக்கு சம்பந்தமாக எந்த ஒரு குற்றவாளிகளும் கைது செய்யப்படாத நிலையில், இத்துணை ஆண்டுகளாக கண்ணகி முருகேசன் வழக்கை நடத்தி அவர்களுக்கு நீதி பெற்று தந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரத்தினம், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவிடம், முருகேசனின் தாயார் சின்னப்பிள்ளையைத் தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.