மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆன்லைன் டிரேடிங் ஆசையில் வெளிநாட்டு ஊழியரை ஏமாற்றி ரூ.13 லட்சம் மோசடி செய்த இளைஞரை, புகாரளித்த 24 மணி நேரத்திற்குள் சைபர் கிரைம் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: 

Continues below advertisement

ஆன்லைன் டிரேடிங் வலை: துபாய் டிரைவருக்கு நேர்ந்த கதி

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வாழ்வாதாரத்திற்காக துபாயில் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் வாயிலாக அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அந்த நபர், 'ஆன்லைன் டிரேடிங்' (Online Trading) மூலம் மிகக் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தைகளைக் கூறி, அந்த நபரை தன் வலையில் வீழ்த்தியுள்ளார்.

இதை உண்மை என்று நம்பிய அந்த வெளிநாட்டு ஊழியர், மயிலாடுதுறையில் வசித்து வரும் தனது மனைவி மூலம், அந்த மர்ம நபர் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்குப் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.13,00,000/- (பதிமூன்று இலட்சம்) பணத்தை இணையதளப் பரிவர்த்தனை வாயிலாக அனுப்பியுள்ளார்.

Continues below advertisement

பணம் போனதும் துண்டிக்கப்பட்ட தொடர்பு

பணம் முழுவதையும் பெற்றுக்கொண்ட பிறகு, அந்த நபர் தனது தொலைபேசி இணைப்பைத் துண்டித்து தலைமறைவானார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தத் தொழிலாளி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாகத் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரின் மனைவி கடந்த 19.03.2026 அன்று மயிலாடுதுறை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார்.

24 மணிநேரத்தில் அதிரடி வேட்டை

புகாரைப் பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.ஸ்டாலின் வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளியைக் கைது செய்யவும், பாதிக்கப்பட்டவரின் பணத்தை மீட்கவும் உத்தரவிட்டார். அதன்படி, சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, காவல் ஆய்வாளர் ரவி தீவிரப் புலன் விசாரணையை மேற்கொண்டார். தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுக்கா, வானக்கண்காடு பகுதியைச் சேர்ந்த கவியரசன் (24) என்பது உறுதி செய்யப்பட்டது.

நேற்று (20.03.2026), தலைமறைவாக இருந்த கவியரசனை மடக்கிப் பிடித்த போலீஸார், அவரைத் தீவிர விசாரணைக்குப் பின் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர். வழக்கு பதிவு செய்யப்பட்ட வெறும் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கைது செய்த போலீஸாரின் நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

பணம் மீட்பு மற்றும் போலீஸார் பாராட்டு

கைது செய்யப்பட்ட கவியரசனிடமிருந்து முதற்கட்டமாக ரூ.6,86,433/- பறிமுதல் செய்யப்பட்டு, அது புகார்தாரரின் வங்கி கணக்கிலேயே மீண்டும் வரவு வைக்கப்பட்டது. மீதமுள்ள தொகையை மீட்பதற்கான தொடர் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திறம்படச் செயல்பட்டு குற்றவாளியைப் பிடித்த கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ், ஆய்வாளர் ரவி மற்றும் தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார்.

காவல்துறையின் எச்சரிக்கை

பொதுமக்கள் அறிமுகம் இல்லாத நபர்கள் கூறும் ஆன்லைன் முதலீட்டு ஆசைகளை நம்பிப் பணத்தை இழக்க வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். இது போன்ற இணையதளக் குற்றங்களால் பாதிக்கப்பட்டால், உடனடியாக 1930 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.