கோவை நியூ சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில், வீட்டு வாசலில் அடையாளம் தெரியாத போதை ஆசாமி ஒருவர் படுத்து உறங்கியதால், இரு மகள்களுடன் வசித்து வரும் பெண் ஒருவர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வீட்டிற்குள் செல்ல முடியாமல் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

சிவசங்கரி என்ற பெண்மணி தனது இரண்டு இளம் மகள்களுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். வழக்கம்போல் வேலை முடித்து நேற்று மாலை 7.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பியபோது, அவர்களது வீட்டின் பிரதான கதவு முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போதை நிலையில் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவரை எழுப்பினால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், தாய் மற்றும் அவரது மகள்கள் வீட்டிற்குள் செல்ல முடியாமல் வெளியில் காத்திருந்தனர். உதவி கோரி தமிழக காவல்துறையின் அவசர உதவி எண் 100-க்கும், பெண்களுக்கான உதவி எண் 181-க்கும் தொடர்புகொண்டதாகவும், உடனடி உதவி கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Continues below advertisement

இதையடுத்து காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவலர், போதை நிலையில் இருந்த நபரை எழுப்பி விசாரித்தார். ஆனால் அவர் தனது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை தெளிவாக தெரிவிக்க முடியாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த நபரை அங்கிருந்து செல்லுமாறு காவலர் எச்சரித்து அனுப்பி வைத்தார். சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட செல்போன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் கோவையில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளதுடன், குடியிருப்புப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.