மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட  போதைப் பொருள் பயன்பாடு நாள் தோறும் அதிகரித்து வருவதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும்  இதனால் இளைஞர், முதிர்வர்கள் மற்றும் இன்றி கல்லூரி, பள்ளி மாணவர்கள் கூட அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட பல்வேறு போதை வஸ்துகளை அதிகளவில் பயன்படுத்துவதாக அண்மையில் செய்திகள் வெளியானது. 




இதனை அடுத்து, மயிலாடுதுறை மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு அதிக அளவிலான மது மற்றும் இன்றி குட்கா உள்ளிட்ட போதை பொருட்களும் அதிகளவில் கடத்தல் நடப்பதாக மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவல் அடுத்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின்பேரில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் அறிவழகன் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் மாவட்டத்தில் பல கடைகளில் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். 




அப்போது, பெரம்பூர் காவல் சரகத்துக்கு உள்பட்ட கடலி கிராமத்தில் உள்ள 27 வயதான பொன்னரசன் என்பவரது கடையில் வைத்து இருவர் ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. அதனை தொடர்ந்து  விசாரணை மேற்கொண்டதில், பொன்னரசன் கடையில் காரைக்கால் நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த 45 வயதான ராஜா, 50 வயதான மணிமாறன் என்பதும், அவர்கள் இருவரும் காரைக்காலில் இருந்து புகையிலைப் பொருள்களை கொண்டுவந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 


Actor Bala Free Ambulance: மீண்டும் மலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் .. நடிகர் பாலாவின் செயலால் நெகிழும் ரசிகர்கள்..!


இதனை தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப், விமல் பாக்கு உள்ளிட்ட 55 கிலோ புகையிலை பொருள்கள் மற்றும் ராஜா, மணிமாறன், பொன்னரசன் ஆகிய மூவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து பெரம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் பூங்கா, மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் பல்வேறு போதைப் பொருளை பயன் படுத்தி போதையில் இருந்த நிலையில், அவர்களை பள்ளி ஆசிரியர் ஒருவர் துரத்தி சென்ற அறிவுரை வழங்கி பள்ளிக்கு அழைத்து வந்ததும் அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா அந்த பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டது குறிப்பிட்டத்தக்கது.




மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுபோன்ற மது, கஞ்சா, ஹான்ஸ், புகையிலை போன்ற போதை வஸ்துக்கள் விற்பனையும், அதனை பயன்படுத்தும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், இதனை தடுப்பது என்பது காவல்துறையினருக்கு குதிரை கொம்பாக உள்ளதென்றும், இதில் தடுப்பதில் உள்ள சிக்கல் எது என்பதை முதலில் கண்டறிந்து முதல் அதனை சரி செய்தால் மட்டுமே இதை தடுக்கலாம் என்றனர்.