ஜம்மு விமானப்படை விமானநிலையத்தின் 2 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கைகள் வெளிவந்துள்ளன.அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளபடி விமானநிலையத்தின் இரண்டு இடங்களில் ட்ரோன்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. ட்ரோன்கள் கொண்டு  ஐ.ஈ.டி எனப்படும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் கருவிகள் விமானத்தளத்தின் தனித்தனி இடங்களில் இறக்கிவிடப்பட்டுள்ளன.


சுமார் 5-6 கிலோ எடையுள்ள இந்த வெடிக்கும் கருவிகளை ஜம்மு போலீசார் மீட்டுள்ளனர்.  இந்த பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் தலையீடு இருக்கலாம் என உளவுத்துறை சந்தேகிக்கிறது. இந்தத் தாக்குதலால் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் எதும் ஏற்படவில்லை. மற்றொரு செய்தியில் இந்தியத் தரப்பு சேதம் எதுவும் ஏற்படாமல் தவிர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 

முன்னதாக , ஜம்மு விமான நிலையத்தின் தொழில் நுட்ப பகுதியில் நள்ளிரவில் இரண்டு முறை குண்டு வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குண்டு வெடிப்பினால் எந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது பற்றி தகவல் வெளியாகவில்லை. விமான நிலையத்திற்கு அருகே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்து வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





நள்ளிரவில் ஜம்மு விமான நிலையத்தின் மேற்கூரை பகுதியிலும் தொழில் நுட்ப பகுதியிலும் குண்டு வெடித்த சத்தம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு உடனடியாக வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் விரைந்தனர். பாதுகாப்புப் படையினரும் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.