வேலூரில் மனைவி நகையை விற்று காதலியுடன் தங்கியிருந்த  தி.மு.க பிரமுகர் கையும் களவுமாக பிடிபட்டார். மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


 




வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டையை அடுத்த ஆர்.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவர் தி.மு.க மாணவர் அணி மாவட்ட துணை செயலாளராக இருந்துவருகிறார். இவர் சொந்தமாக பைனான்ஸ் மற்றும் காலணி தயார் செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த 2014-ல் வித்யா என்ற பெண்ணை திருமணம் செய்தார். 10 ஆண்டு காதலுக்கு பின் இரு வீட்டார் சம்மதத்துடன் சுந்தர் வித்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். மூன்று மகன்கள் உள்ளனர். சுந்தர் தொழில் செய்ய பணம்  தேவையென்று வித்யாவின் 35 சவரன் நகையை பெற்று செலவு செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து தொழில் செய்ய கூடுதலாக பணம் வேண்டும் என கேட்டு காதல் மனைவி வித்யாவிற்கு தினமும் சண்டை போட்டு தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ளமுடியாத வித்யா கணவன் சுந்தரை பிரிந்து வாழ்ந்துள்ளார். இந்நிலையில் சுந்தர், 45 வயது மதிக்கத்தக்க காதலியுடன் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். 


வித்யா தன் குடும்பத்தினருடன் சுந்தரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது சுந்தர் படுக்கை அறையில் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வித்யா கணவர் சுந்தரை அடித்து துவைத்துள்ளார். குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுந்தர் "இனிமேல் தவறு செய்யமாட்டேன் வித்யாவுடன் நல்லபடியாக வாழ்வேன்" என சத்தியம் செய்துள்ளார். இந்நிலையில் சுந்தர் மீண்டும் தவறான வழிக்கு சென்றுள்ளார். காதலியுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. உயிர் பயத்தில் வித்யா தற்போது குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சூழலில் காவல்துறையினர் வித்யாவின் புகாரை ஆய்வு செய்த பின்னர் வழக்கு பதிவு செய்து சுந்தரை தேடி வருகின்றனர்.




இது குறித்து வித்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், “என் கணவர் எவ்வளவு தவறு செய்தாலும் அதனை மறந்து வாழ்கிறேன் என அவரிடம் தெரிவித்தேன். ஆனால் எனது கணவர் தொடர்ந்து பல்வேறு தொல்லை கொடுத்து, என் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டுகிறார். அரசியல் கட்சியில் உள்ளதால் அவரை ஒன்னும் செய்யமுடியாது என்று பல்வேறு குற்றங்களை செய்கிறார். நிம்மதியாக வாழவேண்டும் என்று நினைக்கும் சூழலில் இவ்வாறு செய்கிறார். இதனால் உயிர் பயத்தில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்" என்றார். இது குறித்து பேசிய காவல் துறையினர்,“புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறோம்” எனத் தெரிவித்தனர்.