திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் பூலத்தூர் கிராமத்தில் விவசாயம் செய்து வருபவர் மணிமாறன். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மணிமாறனின் மனைவியின் 16 வயதான தங்கை நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். பூலத்தூர் கிராமத்தை பூர்விகமாக கொண்ட சுரேந்திர குமார் (24) என்பவர் கோயமுத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 



மணிமாறனின் மனைவியின்  தங்கைக்கும், சுரேந்திர குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் வெளியில் தெரிந்த நிலையில் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இருப்பினும் 16 வயது சிறுமி தனது தாயாரின் செல்போன் மூலம் அடிக்கடி சுரேந்திர குமாரிடம் பேசி வந்துள்ளார். இதனால் 16 வயது சிறுமியின் மாமாவான மணிமாறனுக்கும் சுரேந்திரனுக்கும் செல்போனில் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் பூலத்தூர் கிராமத்தில் ராமர் கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது. 



இந்த திருவிழாவிற்கு பூலத்தூர் கிராமத்தை பூர்விகமாக கொண்ட அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்வது வழக்கம் எனவே இதே ஊரை பூர்வீகமாக கொண்ட சுரேந்திர குமாரும் கோவையில் இருந்து அத்திருவிழாவில் பங்கேற்க வந்துள்ளார். அப்போது மணிமாறனுக்கும் சுரேந்திர குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மதுபோதையில் இருந்ததால் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அப்போது சுரேந்திர குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு மணிமாறனின் கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. பலத்த காயத்துடன் நிலைத்தடுமாறி விழுந்த மணிமாறனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே மணிமாறன் உயிரிழந்தது தெரியவந்தது. 



இதனை தொடர்ந்து உடற்கூறு ஆய்விற்காக மணிமாறனின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, இந்த கொலை சம்பவம் குறித்து கொலை நடந்த இடத்தை நள்ளிரவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரில் பார்வையிட்டார். மேலும் சுரேந்திரகுமாரின்  செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட தாண்டிக்குடி காவல் துறையினரிடம் சுரேந்திரகுமார் நான் விவசாய தோட்டத்தில் இருப்பதாகவும், காலை 10 மணிக்கு மேல் காவல் நிலையத்தில் சரண் அடைவதாகவும் கூறியுள்ளார். இதற்கு பின் அவரது செல்போன் அதிகாலை முதல் சுவிட்ச் ஆப்பில் இருப்பதாக காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.




இந்நிலையில் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சந்திரன் இன்று காலை கொலை நடந்த இடத்தினை நேரில் பார்வையிட்டு பூலத்தூர் கிராம மக்களிடையே விசாரணை மேற்கொண்டார். இது குறித்து தாண்டிக்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுரேந்திர குமாரை  தேடி வருகின்றனர். நேற்று இரவு  பூலத்தூர் கிராமத்தில் திருவிழா நடைபெற்று வந்த நிலையில் இந்த கொலை சம்பவம் அரேங்கேறியது அப்பகுதிமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் கடந்த 5 தினங்களுக்கு முன்பு கைகள் கட்டப்பட்டு அடையாளம் தெரியாத சடலம் மீட்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவில் பூலத்தூர் கிராமத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம்  மலை கிராம மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.