பழனி அருகே கூலித் தொழிலாளி அடித்து கொலை . வீட்டின் அருகே குழி தோண்டி உடல் புதைப்பு. தங்கையை கொடுமைப்படுத்தியதால் திருநங்கையான சகோதரன் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் - கொலையாளியை கைது செய்து போலீஸார் வீசாரணை.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முத்து. முத்துவிற்கு மாரியம்மாள் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முத்து வீட்டிற்கு வராததால் மனைவி மாரியம்மாள் பழனி தாலுகா காவல் நிலையத்தில் முத்துவை காணவில்லை என புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் போலீசார் முத்துவை பல இடங்களில் தேடி வந்தனர். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக முத்துவின் வீட்டிற்கு அருகில் குழி தோண்டப்பட்டது போல தடயம் இருப்பதாக போலீசாருக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தடயங்களை சேகரித்து முத்துவின் வீட்டின் அருகில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த இடத்தை தோண்டினர். அங்கு முத்துவின் உடல் புதைக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. காணாமல் போனதாக கூறிய முத்து, வீட்டின் அருகே கொலை செய்து புதைக்கப்பட்டிருந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முத்துவை கொலை செய்தது யார்? குழி தோண்டி புதைத்தது யார் ? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொலையான முத்துவின் மனைவி மாரியம்மாளின் சகோதரர் மூன்றாம் பாலினத்தவரான வைஷ்ணவி இருதினங்களாக வீட்டிற்கு வராமல் தலைமுறைவாகியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வைஷ்ணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் திருநங்கை வைஷ்ணவி பெங்களூரில் தலைமறைவாக இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் வைஷ்ணவியின் செல்போன் சிக்னலை வைத்து வைஷ்ணவி இருக்கும் இடத்தை தெரிந்து மடக்கி பிடித்தனர். வைஷ்ணவி பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்த போது கொலைக்கான காரணம் தெரியவந்தது. தனது சகோதரி மாரியம்மாளை திருமணம் செய்ததில் இருந்து முத்து மது போதையில் வந்து அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதனால் அடிக்கடி முத்துவிற்கு மாரியம்மாவிற்கும் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனைப் பார்த்து மன உளைச்சலில் இருந்த வைஷ்ணவி மாரியம்மாள் இரவில் மில்லுக்கு வேலைக்குச் சென்ற நேரத்தில் போதையில் இருந்த முத்துவை கம்பியால் அடித்து கொலை செய்ததாகவும், பின்னர் உடலை வீட்டின் அருகே குழி தோண்டி புதைத்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கொலையாளி வைஷ்ணவி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.