தருமபுரி அருகே வனப்பகுதியில் மர்மமான முறையில் இளம் பெண் சடலத்தை மீட்டு கொலையா? தற்கொலையா? என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் கடத்தூரான் கொட்டாய் அடுத்த கோம்பை வனப்பகுதியில் இளம் பெண் ஒருவர் சடலமாக இருப்பதாக அதிமன்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற அதியமான்கோட்டை காவல் துறையினர் சடலத்தை ஆய்வு செய்துள்ளனர். இதில் இளம் பெண் கழுத்தில், தழும்பு இருந்ததை கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், தருமபுரி கோல்டன் தெருவை சேர்ந்த, நகராட்சி எட்டாவது வார்டு திமுக கவுன்சிலர் புவனேஸ்வரன் மகள் ஹர்ஷா என்பது தெரியவந்தது. ஹர்ஷா ஓசூரில் உள்ள மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து பணிக்கு சென்றதாகும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஹர்ஷா கோம்பை வனப்பகுதியில், மர்மமான முறையில் இறந்து கிடந்ததால், சடலத்தை மீட்டு, காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஹர்சாவின் கழுத்தில், நெரிக்கப்பட்டதற்கான அடையாளம் இருப்பதால், கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இளம் பெண் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்