தருமபுரி: காரிமங்கலம் அருகே இடைத்தரகர்களை வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள சிசு ஆணா, பெண்ணா என கண்டறிந்து வந்த செவிலியர் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது.


 

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே செம்மன்குழிமேடு என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக இடைத்தரகர்  மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு  கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என பரிசோதனையில் கண்டறிந்து,

பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்க்கு இரகசிய தகவல் கிடைத்தது.

 

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி தலைமையிலான மருத்துவர்கள் பாலசுப்ரமணியம், பாலாஜி அடங்கிய மருத்துவ குழுவினர் காரிமங்கலம் பேருந்து நிலையத்தில் கண்காணித்து வந்துள்ளனர். அப்பொழுது ஒரு ஆட்டோவில் ஆறு பெண்கள் ஏறி உள்ளனர். இதனை அறிந்த மருத்துவ குழுவினர் குழுவில் இருந்த இரண்டு பெண்களை பரிசோதனை செய்வதற்காக அந்த ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் ஆட்டோவைப் பின் தொடர்ந்து சென்று உள்ளனர் இந்த ஆட்டோ காரிமங்கலம் அருகே உள்ள  செம்மன்குழிமேடு கிராமத்தில் உள்ள சுபாஷ் (28) என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து ஆட்டோ இருந்த வீட்டிற்குள் மருத்துவ குழுவினர் நுழைந்தனர்.



 

அப்போது சோதனை மேற்கொண்ட போது, அந்த வீட்டில் சட்டவிரோதமாக ஸ்கேன் மெஷின் வைத்து, தரையில் கர்ப்பிணி பெண்களை படுக்க வைத்து பரிசோதனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சட்ட விரோதமாக  அழகாபுரியை சேர்ந்த, தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய கற்பகம் (38) என்பவர் சட்ட விரோதமாக  7 கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என கண்டறிந்து பாலின பரிசோதனை செய்து போது கையும் களவுமாக பிடிபட்டனர்.  இந்த பரிசோதனை செய்வதற்கு கர்ப்பிணி பெண்கள் இடம் 12 ஆயிரம் கட்டணமாக வசூல் செய்யப்பட்டு இருந்தது. மேலும் இதில் மருத்துவக் குழுவினர் அனுப்பிய, கர்ப்பிணி இல்லாத பெண் ஒருவருக்கு மூன்று மாதம் கர்ப்பம் இருப்பதாகவும், அந்த கர்ப்பத்தை களைத்து விடலாம் எனவும் இந்த குழுவினர் தெரிவித்துள்ளனர். 

 

தொடர்ந்து இந்த சட்ட விரோத செயல்களை செய்து வந்த, கற்பகம், இதற்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் விஜயகுமார் (35), இடைத்தரகர் சிலம்பரசன் (31), ஆட்டோ ஓட்டுநர் செல்வராஜ் (35) வீட்டின் உரிமையாளர் சுபாஷ் (28) ஆகிய 5 நபர்களை பிடித்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து காரிமங்கலம் காவல் துறையினர் சட்ட விரோதமாக கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை செய்து வந்த கும்பலை கைது செய்து, அவர்களிடமிருந்த ஸ்கேன் இயந்திரம்,  4 செல்போன்கள், 2 சொகுசு கார் 1 ஆட்டோ  உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காரிமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



 

மேலும் கடந்த 2022 மே மாதம் தருமபுரி அடுத்த ராஜாப்பேட்டையில் ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் என்பவரது வீட்டில் சட்ட விரோதமாக கருவில் இருக்கும் சிசு ஆணா பெண்ணா என கண்டறிந்து, கற்பகம் கருக்கலைப்பு செய்ய, கர்ப்ப பையில் மாத்திரையை வைத்துள்ளார். ஆனால் கரு கலைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது தெரிந்துள்ளது. இதனால் செயற்கை முறையில், கர்ப்பபைக்குள் கை விட்டு, கற்பகம் குழந்தையை வெளியே இழுத்துள்ளார். ஆனால் குழந்தையின் தலை மட்டும் தனியாக வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை வனஜாவிற்கு தெரியப்படுத்தாமல், உடலில் ரத்தம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கருக்கலைப்பிற்காக பணம் பெறாமல், இவர்களே கார் வைத்து  அழைத்து சென்று, வனஜாவின் வீட்டில் இறக்கிவிட்டு வந்துள்ளனர்.

 

இந்நிலையில் நள்ளிரவில் வனஜாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதனை தொடர்ந்து  தருமபுரி மாவட்ட மருத்துவத்துறை ஊரக பணிகள் இணை இயக்குனர் மூலம் தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து வனஜா மற்றும் கற்பகம் செல்போன் நம்பரை வைத்து, காவல் துறையினர் விசாரணையை நடத்தினர்.

 

அப்பொழுது திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் என்பவர், காரில் ஸ்கேன் இயந்திரத்தை எடுத்து வந்து, பரிசோதனை செய்து, சிசுவின் பாலினத்தை தெரிவித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு உடந்தையாக பல்வேறு இடைத்தரகர்கள் இருப்பதும், ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் அழைத்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.  காவல் துறையினர்  ராஜபேட்டையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜோதி (33) சுதாகர்(37), தருமபுரியை சேர்ந்த கற்பகம்(38) ஆகியோர் எந்த மருத்துவ படிப்பும் படிக்காமல் ஸ்கேன் செய்து, சட்டத்திற்கு புறம்பாக கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து, பெண் சிசுக்களை மட்டும் கருக்கலைப்பு செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து மேலும் பாலினம் கண்டறிய 6 கர்பினிகளை இடைத்தரகர்கள், சரிதா(40), குமார்(38), தருமபுரி செட்டிகரை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் (33) அழைத்து வந்திருந்தனர்.

 

 

இந்த இடைத்தரகர்கள் மூலம் பாலினம் கண்டறிய வரும் கர்ப்பினிகள் சினிமா பாணியில் கண்களை கட்டி அழைத்து சென்று, வீட்டிற்குள் நுழைந்தவுடன் கண்கட்டை கழற்றிவிட்டு, பரிசோதனை முடிந்த பின்பு மீண்டும் கண்களை கட்டி அழைத்து வந்து பரிசோதனை செய்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட கற்பகம் தற்பொழுது தொடர்ந்து மீண்டும் இதே சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இதுவரை தருமபுரி மாவட்டத்தில் இரண்டு முறையும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒருமுறை கற்பகம் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இவர்களுக்கு இன்னும் சில பேர் உதவி செய்து வருகின்றனர் இது ஒரு சங்கிலி தொடர் போன்று நீண்டு வருகிறது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், யாரும் உதவி செய்யாமல் இருக்கவும் சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இதனை தடுக்க முடியும்.