சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவுக்கு உட்பட்ட தெ.புதுக்கோட்டை வருவாய் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மானாமதுரை மண்டல துணை தாசில்தார் உதவியுடன் தனிநபர் இடம் மற்றும் அரசு நீர்பிடிப்பு நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் தனிநபருக்கு புரோக்கர்களாக செயல்பட்டு விற்பனை செய்தாக  சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. இந்த புகாரை உயரதிகாரிகள் மூலம் அறிந்த மண்டல துணை தாசில்தார்  மறுபடியும் அரசு மற்றும் தனியார் நிலங்களை  பழைய நிலைக்கு ஆவணங்களை மாற்றியுள்ளார்.




 

மாவட்ட ஆட்சியர் விசாரணையில் போலி ஆவணங்கள் மூலம் சுமார் 200க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் மாற்றியதை உறுதி செய்ததன் அடிப்படையில் மண்டல துணை வட்டாட்சியர் சேகர் என்பவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அவருக்கு உதவியாக செயல்பட்ட  தெ.புதுக்கோட்டை குருப்கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார் என்பவரை கோட்டாட்சியர் முத்துகழுவன் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

 





இதுபோன்று மானாமதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகம் இன்றி போலியாக வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் ஆவணங்கள் தயாரித்து தனி நபர்கள் நிலங்களையும் அரசு நிலங்களையும் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து வருவதாகவும்  போலி ஆவணங்கள் தயாரிக்கும் அதிகாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.




 

இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி நம்மிடம்...” இது தொடர்பான முழு விசாரணை நடைபெற்று வருகிறது. துணை வட்டாச்சியர் மற்றும் வி.ஏ.ஓ., சட்ட விரோத செயலில் ஈடுபட்டுள்ளதால் முதல் கட்டமாக சஸ்பெண்ட் செய்துள்ளோம். 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் மாறி இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது. உரிய விசாரணை நடைபெறுகிறது. இது குறித்து ஆர்.டி.ஓ.,வை விசாரணை செய்ய சொல்லியுள்ளேன். அதன் அடிப்படையில் குற்றசெயலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.