இந்திய குத்துசண்டை வீரர் சுஷில் குமாரை விசாரிக்க கூடுதல் அவகாசம் கேட்ட டெல்லி போலீஸின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. நீதிமன்ற காவலில் விசாரணை மேற்கொள்ள சுஷில்குமாரை ரிமாண்ட் செய்து உத்தரவிட்டது டெல்லி உயர்நீதிமன்றம்.






முன்னதாக, கடந்த மே 5-ஆம் தேதி மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் மற்றொரு மல்யுத்த வீரரான 23 வயதுடைய சாகர் ராணா இருவருக்கும் டெல்லியிலுள்ள சத்ராஸல் விளையாட்டு அரங்கின் கார் பார்க்கிங்கில் கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் சாகர் ராணாவை சுஷில் குமாரும் அவரின் நண்பர்கள் கடுமையாக தாக்கினர். இதில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சக மல்யுத்த வீரரை கொடூரமாக தாக்கி உயிரிழக்கச் செய்த வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில்குமார் சில நாட்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்தனர். மேலும் சக மல்யுத்த வீரர்களை மிரட்டுவதற்காக தாங்கள் தாக்குதல் நடத்தியதை சுஷில்குமாரின் நண்பர்கள் செல்போனில் வீடியோவும் பதிவு செய்திருந்தனர்.


அதில், மல்யுத்த வீரர் சுஷிலும் அவரது நண்பர்கள் 3 பேரும் சாகரை சுற்றி நிற்கின்றனர். தாக்குதலால் நிலைகுலைந்த சாகர் தரையில் விழுந்து கிடக்கிறார். சுஷில் குமார் கையில் கட்டையுடன் நிற்கிறார், இது அனைத்துமே இடம்பெற்றுள்ள அந்த வீடியோ பதிவு இவ்வழக்கில் மிக முக்கியமான ஆதாரமாக பார்க்கப்படுகிறது. அவரை கைது செய்த டெல்லி போலீஸ் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மேலும் 3 நாட்கள் காவல்துறை கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ள டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது. அதில் இந்த வழக்கின் விசாரணையில் பல்வேறு குழப்பங்கள் தொடர்கின்றன, அதனால் கூடுதல் அவகாசம் தேவை, மேலும் மனுவில் "இது ஒரு ரத்தவெறி கொண்ட கொலை" என குறிப்பிட்டு இருந்தனர். இந்நிலையில் தான் டெல்லி போலீசின் மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றம், நீதிமன்ற காவலில் சுஷில் குமாரை விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.


இந்தியாவிற்காக 2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் சுஷில் குமார், நாடு முழுவதும் மிகவும் மதிக்கத்தக்க நபராக இருந்தவர். ஆனால் இது போன்ற ஒரு வழக்கில் முக்கிய குற்றவாளியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளது, மிகப்பெரிய ஒரு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இந்த வழக்கின் ஒவொரு நகர்வுகளும் மிகப்பெரிய கவனிப்பை பெற்றுவருகிறது.