16.8 கோடி இந்தியர்களின் தகவல்களை திருடியதாக 6 பேர் கொண்ட கும்பலை சைபராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் தகவல் திருட்டு நடைபெற்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தகவல்களைத் திருடி விற்பனை செய்து வந்ததாக டெல்லி நொய்டா, நாக்பூர் மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் இருந்து கால் செண்டர் நடத்தி வந்த குமார் நிதிஷ் பூஷன், குமாரி பூஜா பால், சுசீல் தோமர், அதுல் பிரதாப் சிங், முஸ்கன் ஹஸ்ஸன், ஸியா உர் ரஹ்மான், சந்தீப் பால் உள்ளிட்ட கும்பலை சைபராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் இந்த கும்பல் 1.2 கோடி வாட்சப் பயனாளர்கள், 17 லட்சம் ஃபேஸ்புக் பயனாளர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அரசுப் பணியாளர்கள், சிபிஎஸ்இ பள்ளிகளின் தகவல்கள், பான் கார்டு பயனாளர்களின் தகவல்கள், 3 கோடி தொலைபேசி பயனாளர்களின் தகவல்கள், காப்பீடு மற்றும் கடன் ஆகியவற்றுக்கு விண்ணப்பித்த பயனாளர்களின் தகவல்கள் என்று மொத்தம் 130 வகையிலான 16.8 கோடி பயனாளர் தகவல்களை இந்த கும்பல் திருடி விற்பனை செய்துவந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரா பேட்டியளித்தார். அப்போது, இந்த மோசடியாளர்கள் டேட்டா மார்ட் இன்ஃபோடெக், க்ளோபல் டேட்டா ஆர்ட்ஸ், எம்எஸ் டிஜிட்டல் க்ரோ உள்ளிட்ட தங்கள் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் மூலம் இயங்கி வந்துள்ளனர். இவர்கள் தங்களை ஜஸ்ட் டயல் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். அதன் மூலம் வரும் அழைப்புகளைக் கொண்டு யார் யாருக்கு எந்த மாதிரியான தகவல்கள் தேவையோ அதனை நாடுமுழுவதும் பல்வேறு பயனாளர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.
ஒரு துறையைப் பற்றிய ரகசிய தகவல்கள் அல்லது தனி நபர்கள் பற்றிய தகவல்களை கேட்டு பயனாளர்கள் ஜஸ்ட் டயலுக்கு அழைத்து கேட்டால் அந்த தகவல்கள் பட்டியலிடப்பட்டு சேவை வழங்குபவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த மோசடியாளர்கள் அந்த பயனாளர்களை திரும்ப அழைத்து அவர்கள் கேட்ட தகவல்களை தருவார்கள். இந்த தகவல்கள் தான் சைபர் கிரைம் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், ஆக்ஸிஸ், ஹெச்.டி.எஃப்.சி ஆகிய வங்கிகளின் பயனாளர்களுடைய தகவல்களும் கசிந்துள்ளது. காப்பீடு மற்றும் கடன் ஆகியவற்றுக்கு விண்ணப்பித்த பயனாளர்களின் தகவல்க்ளும் திருடப்பட்டுள்ளது. இந்த தகவல்களை அந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் பணியாளர்களிடமிருந்தே சேகரித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
அதோடு, பாதுகாப்புத்துறையை சேர்ந்த மற்றும் அரசு பணியாளர்களின் தகவல்கள் அவர்களை உளவு பார்க்க, ஆள்மாறாட்டம் செய்ய, தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் கடுமையான குற்றங்களை செய்யவும் பயன்படுத்த முடியும். மேலும், பயனாளர்களை நம்ப வைத்து மிகப்பெரிய அளவில் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட இந்த தகவல்கள் பயன்படுத்தப்படுகிறது.
எந்த வித பின்புல சரிபார்ப்புகளும் இன்றி கேட்ட தகவல்களை ஜஸ்ட் டயல் நிறுவனம் கொடுத்துள்ளது தெளிவான ஆதாரத்துடன் தெரிய வந்துள்ளது. நாங்கள் அவற்றையும் ஆய்வு செய்து அவர்கள் மிது சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஆவன செய்வோம் என்று கூறியுள்ளார்.
இப்போது வரை விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. விசாரனையின் தொடக்கத்திலேயே பாதுகாப்பு அதிகாரிகளின் விவரங்கள் வெளியானது குறித்து எதையும் அதிகமாக பொதுவெளியில் சொல்லமுடியாது. முக்கியமான பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், பொதுவாழ்வில் உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் ஏதேனும் திருடப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று ஸ்டீஃபன் ரவீந்திரா கூறினார்.