உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியரின் பைக்கை தொட்டதற்காக 6ஆம் வகுப்பு பயிலும் தலித் சிறுவன் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement


உத்தரப்பிரதேச மாநிலம் ராணாபூரில் உள்ளது அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று. அங்கு ஆசிரியராக பணியாற்றுகிறார் கிருஷ்ண மோகன் சர்மா. இவருடைய வாகனத்தை தலித் மாணவர் ஒருவர் தொட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர் மாணவனைத் தாக்கியுள்ளார். அதுவும் ஒரு அறையில் பூட்டிவைத்து இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். அந்த மாணவனின் கழுத்தையும் கொலைவெறியுடன் நெறித்துள்ளார். சக ஆசிரியர்கள் மாணவனை மீட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து நக்ரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.   இந்நிலையில் அந்த ஆசிரியர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர், உறவினர் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


பதறவைத்த ராஜஸ்தான் சம்பவம்:


ராஜஸ்தானில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன், ஆசிரியைக்காக வைக்கப்பட்டிருந்த பானையில் இருந்து தண்ணீர் குடித்ததற்காக பள்ளி ஆசிரியர் அடித்ததால் உயிரிழந்தார். அந்த ஆசிரியரை போலீஸார் கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அலுவலர்கள் தெரிவித்தனர்.


ஜலோர் மாவட்டத்தில் உள்ள சைலா கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஜூலை 20-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. கண் மற்றும் காதில் காயம் அடைந்த பாதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக 300 கிமீ தொலைவில் உள்ள அகமதாபாத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சையின் போதே சிறுவன் உயிரிழந்தார்.


இதனால் சைலா கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டதால் நிலைமை மோசமடைவதைத் தடுக்க அப்பகுதியில் இணைய வசதி முடக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு விரைவில் நீதி உறுதி செய்யப்படும். 


முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் ட்வீட் செய்தார். சிறுவனின் உடல் உடற்கூராய்வுக்காக போலீஸ் குழு ஒன்று அகமதாபாத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டு, பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 


நாடு 75வது சுதந்திர தினத்தின் நிறைவு விழாவை உற்சாகமாகக் கொண்டாடும் வேளையில் தான் தலித் சிறுவர்கள் பள்ளிகளிலேயே பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களால் சாதிய ரீதியிலான வன் கொடுமைகளுக்கு ஆளாகி வரும் சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.