தனியார் பள்ளி மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பின்போது ஆபாச செய்திகள் அனுப்பிய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்குமார் என்னும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படாமல் உள்ளன. இந்த நிலையில் மாணவ-மாணவிகளின் கல்வியை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகளை எடுக்க தமிழக அரசு முடிவெடுத்து கடந்த ஓராண்டிற்கு மேலாக ஆன்லைன் மூலமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பாக பல முக்கிய பள்ளிகளின் தாளாளர்கள், ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதே போன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் திருவாரூர் மாவட்டத்திலும் அரங்கேறி உள்ளது என்பது பல்வேறு தரப்பினரிடையே வேதனையை தந்துள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியான ஸ்ரீ சண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு வகுப்பு வாரியாக ஆன்லைன் மூலமாக பாடத்திட்ட வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. இதனிடையே அந்த ஆன்லைன் வகுப்புகளில் போலியாக மாணவி பெயரில் கிருஷ்ணகிரி மாவட்டம் வீராச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய மோகன்குமார் என்கிற இளைஞர் இணைந்துள்ளார். அவர் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவிகளுக்கும் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆபாச செய்திகளையும், படங்களையும் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார். இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் கடந்த 29ஆம் தேதியன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனிடம் நேரடியாக புகார் அளித்துள்ளது.



புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து  சைபர் செல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மூலமாக மாணவிகளுக்கு ஆபாச செய்திகள் அனுப்பிய மர்ம நபர் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் மாணவிகளுக்கு ஆபாச செய்திகள் அனுப்பியவர் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அடுத்த வீராச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகனான 26 வயதுடைய மோகன்குமார் என்பது கண்டறியப்பட்டது. உடனடியாக விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் மோகன்குமாரை கைது செய்து தகவல் தொழில்நுட்ப சட்டம், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தண்டனை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

மேலும் இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்று குற்றச் செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஆன்லைன் வகுப்புகளின்போது பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு விழிப்புணர்வுடன் வகுப்புகள் நடத்தவும், முறையாகத் தணிக்கை செய்து ஆன்லைன் வகுப்புகளை நடத்தவும் வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்..