துபாய், ரியாத்திலிருந்து சென்னைக்கு, விமானங்களில் ரூ.1.37 கோடி மதிப்புடைய 2.75 கிலோ தங்கத்தை கடத்தி வந்த 4  பயணிகளை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளில், நூதனமான முறையில் தங்கத் துண்டுகளை மறைத்து வைத்துக் கடத்தி வந்ததை, சுங்கத்துறையினர் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



 

துபாயில் இருந்து இண்டிகோ மற்றும் ஃபிளை துபாய் ஆகிய 2 பயணிகள் விமானங்கள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.  சென்னையைச் சேர்ந்த 2 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்களின் பதில், அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதை அடுத்து அவர்களின்  உடமைகளை சோதனையிட்டனர். உடமைகளில்  பழைய லேப்டாப்புகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தன. 

 

சந்தேகத்தில் அவைகளை பிரித்து பார்த்தபோது, வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்களிலும், லேப்டாப்களிலும், சிறுசிறு தங்க துண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.  இரண்டு பயணிகளிடம் இருந்தும் மொத்தம் ஒரு கிலோ 57 கிராம் தங்கத் துண்டுகள் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவைகளின்  சர்வதேச மதிப்பு ரூ.57. 76 லட்சம். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் இரண்டு பயணிகளையும் கைது செய்தனர். இந்த நிலையில் துபாய் மற்றும் ரியாத்தில் இருந்து ஃபிளை துபாய் மற்றும் கல்ஃப்  ஏர்லைன்ஸ் பயணிகள்  விமானங்கள், சென்னை சர்வதேச விமான நிலையம்  வந்தன. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

 



 

சென்னையைச்  சேர்ந்த 2  பயணிகள் மீது சுங்க  அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை முழுமையாக சோதித்தபோது, அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த பார்சல்களில், தங்க பசை இருந்தது கண்டுபிடித்தனர்.2  பயணிகளிடம் இருந்தும் 1.710 கிலோ தங்கப் பசையை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 79. 29 லட்சம். இரண்டு பயணிகளையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்திய சோதனைகளில், ரூ. 1.37 கோடி மதிப்புடைய இரண்டே முக்கால் கிலோ, தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு,4  பயணிகளை சுங்கத்துறை கைது செய்து, மேலும் விசாரணை நடத்துகின்றனர்.