ஸ்ரீமுஷ்ணம் அருகே இரண்டு லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து தந்தை மற்றும் மகன் இருவரையும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 


கடலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்வது அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட காவல் துறையினர் தீவிர சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ராமாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆனவரதன். இவர் ராமாபுரம் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் நிலையில் இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, போன்ற போதை பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

 

இந்த சூழலில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சேத்தியாதோப்பு டிஎஸ்பி ரூபன் குமார் தலைமையில் காவல்துறையினர் அதிரடியாக கடையில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் ஆனவரதன் இவரது கடையின் அருகாமையில் ஒரு வீட்டில் சுமார் 2 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் 17 மூட்டை மறைத்து வைத்து தந்தை மகன் விற்பனை செய்து வந்ததும் விசாரணை தெரிய வந்தது. 

 

சோதனை செய்யும் பொழுது கடையில் வேலை செய்த வேத நாராயணன் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது, தப்பி ஓடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தந்தை மகன் இருவரையும் கைது செய்து வழக்கு பதிந்து விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.



 

குட்கா தடை : 

 

முன்னதாக குட்கா தடை குறித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் “பான்பராக், குட்கா இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தார். கடந்த ஆட்சியில் பான்பராக், குட்கா கடைகளில் தாராளமாக விற்கப்படுவதை 21 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் தெளிவாக காட்டினர். ஆனால், விற்பனையை தடை செய்யாமல் 21 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யவே முயற்சித்தனர்.

விரைவில் மேல்முறையீடு:


ஆனால், போதைப் பொருட்களுக்கு எதிராக தற்போது நடவடிக்கை மேற்கொண்டு கோடிக்கணக்கான மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா போன்ற மாநிலங்களில் அவற்றிற்கு தடை இல்லை என்பதால் அங்கிருந்து வரும் வாகனங்களில் காய்கறிகள், பூக்கள் கொண்டு வரும் வாகனங்களில் கடத்தி வரப்படுகிறது. இந்த சூழலில் பான்மசாலா, குட்காவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து ஆணையிட்டுள்ளது. இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் விரைவில் மேல்முறையீடு செய்யப்படும்” என்று கூறினார்.