கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 28-ல் பிரியாணி கடை நடத்தி வந்தவர் கண்ணன். இவரை கடந்த நவம்பர் மாதம் 26-ந் தேதி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் விருத்தாசலம் அடுத்த சின்னகாப்பான்குளத்தை சேர்ந்த ராஜவேல் மகன் எழில்நிலவன் என்கிற எழில் (38), புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ரவிவர்மன் என்கிற பாம் ரவி (26), ஆகாஷ்(22), சுபாஷ் (21), ராஜமூர்த்தி (22), சுல்மான்கான் (24), சக்திவேல் (19), பிரசாந்த் (24), ரவிந்தர் என்கிற அரவிந்த் (30), விக்கி என்கிற விக்னேஷ் (31), நடராஜ் (32) ஆகிய 11 பேர் ஓசி பிரியாணி கேட்டு கண்ணன் தர மறுத்ததுடன், போலீசில் புகார் அளித்ததால் வெட்டிக் கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து எழில் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் கைதான எழில் மீது நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் ரவுடி சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் மீது நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், 2 கொலை முயற்சி வழக்குகளும், ஒரு அடிதடி வழக்கும் என மொத்தம் 4 வழக்குகள் உள்ளன.
இதேபோல் பாம் ரவி மீது நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், மங்களம் போலீஸ் நிலையத்தில் ஒரு ஆயுதம் வெடிமருந்து வழக்குகளும் என மொத்தம் 3 வழக்குகள் உள்ளன. இதனால் எழில், பாம் ரவி ஆகியோரது தொடர் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த எழில், பாம்ரவி ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் அவர்களிடம் வழங்கப்பட்டது.