கடலூர் மாவட்டத்தில் சமீப காலமாக போதைப்பொருள் விற்பனை அதிகரித்து உள்ளது இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் ஆ.நத்தம் கிராமத்தை சேர்ந்த படையப்பா (20) கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா அடித்துக்கொண்டே போதையில்,

 

"நாங்கள் எல்லாம் சிவமயம்,

எங்களுக்கு இல்ல பயம்,

எங்க வீட்டு பிள்ளைகள் எல்லாம் தரமான வேலை செய்யும்,

பேசாத வளவளன்னு, ஆயிடுவ பொலபொலன்னு, பிசிறு தட்டிச்சின்ன புள்ளைங்கோ வரும் பிலு பிலுன்னு மஸ்து இருப்பதனால" 

என்கிற குத்துப்பாட்டு பாடி வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பதிவிட்டிருந்தார்.

 


 

கஞ்சா போதை ஆசாமி படையப்பாவின் இந்த குத்து பாட்டு வீடியோ எல்லா வாட்ஸ்அப், பேஸ்புக் குரூப்பிலும் வைரலாக பரவியது இதனை பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை காவல்துறையினர், இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் காவல்துறையினர் சகிதமாக இவரை தேடி வந்தனர்.

 

இதற்கிடையில் மற்றொரு பாட்டிற்கு வீடியோ எடுப்பதற்கான முயற்சியில் இருந்த படையப்பாவை கையும் களவுமாக பிடித்தனர். இவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தபோது அவர் ஆ.நத்தம் என்ற கிராமத்தை சேர்ந்த தனக்கும் பண்ருட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த சந்துரு என்பவருக்கும் வெகு நாட்களாக பழக்கம் இருந்துள்ளது ஒரு கட்டத்தில் சந்துருவிடம் இருந்து கஞ்சா வாங்கியுள்ளார். இவ்வாறு தொடர்ந்து சில மாதங்களாக இருவருக்குமிடையே பரிவர்தனை நடந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதற்கு பின் படையப்பா கொடுத்த தகவலின் பேரில் கஞ்சா வியாபாரி பண்ருட்டியில் உள்ள அம்பேத்கார் நகரில் வசிப்பதை அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று சந்துருவை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

 


 

குத்தாட்டம் போட்ட படையப்பா, மற்றும் படையப்பாவுக்கு கஞ்சா கொடுத்த கஞ்சா வியாபாரி சந்துரு ஆகியோர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் சாதுரியமாக செயல்பட்டு கஞ்சா வியாபாரியையும், குத்தாட்டம் போட்டவரையும் கைது செய்த புதுப்பேட்டை காவல்துறையினர் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்க்கு கடலூர் எஸ்பி சக்தி கணேஷ், பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

 


 

சமீபகாலமாக கடலூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் இதர போதை பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது. கடலூர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனையானது முன்பு இருந்ததை விட தற்பொழுது அதிகமாக தொடங்கியுள்ளது. போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு உள்ள காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து இவ்வாறு நடக்கும் விற்பனைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.