சென்னை, வியாசர்பாடி, சாஸ்திரி நகர் 11ஆவது தெருவைச் சேர்ந்தவர் அப்புனு (வயது 50). இவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கண்ணகி (வயது 45). இவர்களுக்கு அஜய் (வயது 22) என்ற மகனும், அமலா என்ற பெண்ணும் உள்ளனர். அமலா திருமணமாகி தன் கணவருடன் வசித்து வரும் நிலையில்,இவர்களது மகன் அஜய் ரயில்வே ஒப்பந்தப் பணிகளில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
ஆனால் அஜய் கொஞ்சம் கொஞ்சமாக போதைக்கு அடிமையான நிலையில், ஒப்பந்ததாரர்கள் அஜய்யை வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர். மேலும் வேலையில்லாமல் ஊர் சுற்றி வந்த அஜய், மது அருந்தி விட்டு தன் தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கடைபிடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பிப்.07ஆம் தேதி இரவு அஜய்யின் தந்தை அப்புனு இரவு வேலைக்குச் சென்ற நிலையில், பிப்.08 அதிகாலை 4 மணியளவில் போதையில் குடிப்பதற்கு பணம் கேட்டு தன் தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் அஜய்.
ஆனால் தாய் கண்ணகி பணம் தர மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த அஜய் தான் குடித்துக் கொண்டிருந்த பீர் பாட்டிலை உடைத்து அதனைக் கொண்டு அவரைத் தாக்கியுள்ளார்.
தன் தாயின் தலை, முகம் உள்ளிட்ட உடலின் பல இடங்களில் கொடூரமாகக் குத்தி அஜய் தாக்கிய நிலையில், பலத்த காயமடைந்த கண்ணகி, வலியால் அலறியுள்ளார். தொடர்ந்து கண்ணகியின் அலறல் சத்தம் கேட்டு பதறியடித்துச் சென்று அங்கு போய் பார்த்த அக்கம் பக்கத்தினர், எம்கேபி நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், தொடர்ந்து சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்று, கண்ணகியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
மற்றொருபுறம் இவ்வழக்கை விசாரணை செய்து வந்த எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான காவல் துறையினர், தப்பி ஓடிய அஜயை பிப்.08 மதியம் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மகா சிவராத்திரி வருவதால் சிவபெருமானுக்காக மாலை அணிந்து மது அருந்தாமல் இருக்கும்படி தன் தாய் கூறியதாகவும், ஆனால் மீண்டும் மாலை அணிந்து கொண்டே குடிக்கத் தொடங்கியதாகவும், இதனால் தன்னைக் கண்டித்த தாயை பீர் பாட்டிலால் தான் குத்தியதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அஜய்யை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தார். இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கண்ணகி பிப் 09 நள்ளிரவு ஒரு மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.இந்நிலையில், இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி காவல் துறையினர் தொடந்து விசாரித்து வருகின்றனர்.