விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூர் கிராமம் ஆசூர் சாலை பகுதியில் வசித்து வரும் பொய்யாது- ஜெயலட்சுமி தம்பதியினருக்கு புஷ்பராணி மற்றும் மகாலட்சுமி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மூத்த மகள் புஷ்பராணி (25) தலவாளப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கொத்தனாரான கனகராஜ் (26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதேபோல் இளைய மகள் மகாலட்சுமியும் தீவனூர் கிராமத்தை சேர்ந்த கொத்தனார் வேலை செய்யும் அய்யப்பன் (எ) ஜெகன் (26) என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததால் கடந்த ஓராண்டுக்கு முன்பு மகாலட்சுமி கணவரை பிரிந்து தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.


இதனால் ஆத்திரமடைந்த அய்யப்பன் அடிக்கடி மாமியார் வீட்டில் வந்து பிரச்சனை செய்து வந்ததால் மகாலட்சுமி சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை தனது மாமியார் வீட்டில் ஜெகன் இருந்துள்ளார். இதனை அறிந்த கனகராஜ் வீட்டுக்குள் புகுந்து ஜெகனை தரை குறைவாக பேசி  கட்டையால் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் கனகராஜ் அங்கிருந்து தப்பி ஓடினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரோசனை காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தன. மேலும் கனகராஜை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.