சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி எம்.பெருமாள்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது இடத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்கப்பட்டது. செல்போன் டவரை பாதுகாக்க அந்த பகுதியை சேர்ந்த ஒருவரை நியமித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி ராட்சதக் கிரைன் உதவியோடு 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று அங்கிருந்த பாதுகாவலர்களிடம் சில போலியான ஆவணங்களை காட்டி செல்போன் டவர் செயல்படாமல் உள்ளது, எனவே அதை கழற்றி வேறு இடத்திற்கு அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவர்களை செல்போன் டவர் ஊழியர்கள் என நம்பிய அந்த காவலாளி, செல்போன் டவரை கழற்ற ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சுமார் 40 லட்சம் மதிப்பிலான செல்போன் டவரை பாகம் பாகமாக பிரித்து லாரிகளில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன பணியாளர்கள் செல்போன் டவரில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக செல்போன் டவர் இருக்கும் இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது செல்போன் டவர் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், தொடர்ந்து தனியார் செல்போன் நிறுவன பராமரிப்பு மேலாளர் தமிழக அரசு, வாழப்பாடி காவல் நிலையத்தில் செல்போன் டவரை காணவில்லை என புகார் தெரிவித்தார்.
புகாரை பெற்று காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டபோது, செல்போன் டவர் படிப்படியாக அகற்றப்பட்டு திருடப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஏமன்குளம் பகுதியைச் சேர்ந்த நாகமுத்து, வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த ராகேஷ், தூத்துக்குடி மாவட்டம் திருநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் ஆகிய மூன்று பேரும் 10 பேர் கொண்ட கும்பலோடு இணைந்து டவரை திருடி சென்று ஸ்ரீவில்லிபுத்தூரில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மூன்று பேரையும் தனிப்படை போலீசார் கைதுசெய்து திருடப்பட்ட செல்போன் டவர் மற்றும் உதிரிபாகங்கள் ஜெனரேட்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் வாழப்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மூன்று பேரும் இதற்கு முன்பு ஏதேனும் திருட்டு தொடர்புடையவர்களா என முடியும், இந்தியா முழுவதும் செல்போன் டவர் திருடப்பட்ட கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்புள்ளதா எனவும் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வாழப்பாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.