தங்கக்கட்டியை துபாயிலிருந்து வயிற்றுக்குள் வைத்து கடத்தி வந்த இளைஞர் ஒருவரை துன்புறுத்திய கும்பல், அவரை மருத்துவமனையில் அனுமதித்து தப்பித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


கடந்த வாரம் சென்னை பெருங்குடியில் உள்ள அப்பல்லோ மருத்துமனைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை அழைத்து வந்த மர்மகும்பல், அவரை அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளது. இதனையடுத்து இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.




அயன் பட பாணியில் கடத்தல் 


துபாயில் வசித்து வரும் அருண்பிரசாத் என்பவர் தங்கக்கட்டி ஒன்றை செல்லப்பா என்பவரிடம் கொடுத்து, அதை அகமதாபாத் விமான நிலையத்திற்கு கொண்டு சேர்த்தால் 1 லட்சம் தருவதாக கூறியிருக்கிறார். இதையடுத்து அயன் படத்தில் சூர்யாவின் நண்பராக வரும் ஜெகன் போதைபொருளை தனது வயிற்றுக்குள் வைத்து கடத்தி வருவது போல, தங்கக்கட்டியை உருக்கி வயிற்றுக்குள் வைத்து கடத்தி வந்திருக்கிறார் செல்லப்பா.


தங்கம் வயிற்றுக்குள் இருப்பதால் எக்காரணத்தை கொண்டும் வழியில் இயற்கை உபாதைகள் கழிக்க கூடாது என கடத்தல் கும்பல் உத்தரவிட்டு இருந்த நிலையில், விமானம் நிலையம் வந்த செல்லப்பாவுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தங்கத்தை வெளியே எடுத்த செல்லப்பா, சகப்பணியாளரான அனீஸ் என்பவரிடம் கொடுத்து பின்னர் வாங்கிக்கொள்கிறேன் என்று கூறியதாகவும், ஆனால் அவர் தப்பித்துவிட்டு ஓடியதாகவும் சொல்லப்படுகிறது. 




இதனையடுத்து தங்கம் இல்லாமல் சென்னை வந்த செல்லப்பா, அருண்பிரசாத் தலைமையிலான கும்பலிடம் நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார். ஆனால் அந்த கும்பல் அவர் சொன்னதை நம்பாமல் மண்ணடி, அங்கப்பநாயக்கன் தெரு உட்பட பல இடங்களில் அவரை அடைத்து வைத்து தங்கம் எங்கே என்று கேட்டு அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளனர். தொடர்ந்து 45 நாட்கள் அந்த கும்பல் தாக்கியதால் செல்லப்பாவுக்கு உடல்நிலை மோசமாகியிருக்கிறது. 


இதனால் பயந்து போன கடத்தல் கும்பல் செல்லாப்பாவை மருத்துவமனையில் அனுமதித்து அங்கிருந்து தப்பித்தது. இதனைத்தொடர்ந்து செல்லப்பா கொடுத்த வாக்குமூலத்தின் படி, மண்ணடியை சேர்ந்த முகமது இம்தியாஸ் என்பவனை  கைது செய்துள்ள போலீசார், அருண்பிரசாத் உட்பட 7  பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.