நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலச்செவல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் என்ற அப்பாதுரை 65.. இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.. இந்த நிலையில் நேற்று விஜயகுமார் சவாரிக்காக நெல்லைக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மேலச்செவல் அருகே வெள்ள நீர் கால்வாய் பணிகள் நடைபெறும் பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த மர்ம கும்பல் விஜயகுமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.. இதில் தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து உயிர் இழந்தார்.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் முன்னீர் பள்ளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் காவல்துறையினர் விரைந்து சென்று விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகலறிந்த விஜயகுமாரின் உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்து விஜயகுமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.. மேலும் கொலை நடந்த பகுதியில் பதற்றத்தை தணிக்க சேரன்மகாதேவி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.. இருப்பினும் தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருகிறது.. தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில், ஏற்கனவே இருந்த முன் விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் கொலைக்குப் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. கடந்த ஓரிரு மாதங்களாக நெல்லை மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொலை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பாஜக பிரமுகர் கொலை உள்பட இருபதுக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது.. இந்த நிலையில் சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.. கொலை சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்