திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சின்னம்மா நகரை சேர்ந்தவர் கணேசன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு தற்பொழுது தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கணேசனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மன்னார்குடியில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்டு கொள்ளையர்கள் இவரின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த பத்து சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து கணேசனின் அடுத்த வீடான செல்வகுமார் வீட்டிற்குள் நுழைந்து அவரது வீட்டில் இருந்த ஐந்து சவரன் தங்க நகைகளை திருடிக் கொண்டு சென்றுள்ளார்கள்.

 

இந்த நிலையில் கணேசன் வீட்டில் நகைகளை திருடிக் கொண்டு வெளியில் செல்லும் பொழுது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் முகம் பதிவாகி விடுமோ என்ற அச்சத்தில் கண்காணிப்பு கேமரா ஹார்ட் டிஸ்கை திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில் கொள்ளையடித்துவிட்டு வீட்டிலிருந்து வெளியே வந்து சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது எதிரே இருந்த கண்காணிப்பு கேமராவில் இவர்கள் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.



 

இந்த காட்சியில் கைலி அணிந்து கொண்டு சட்டை அணியாமல் மூன்று பேர் கொண்ட கும்பல் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது. அதனை அடுத்து மன்னார்குடி காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்துக்கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். அடுத்தடுத்த மூன்று வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அந்த பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து தங்களது நகைகளை பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்ட நபர்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.



 

குறிப்பாக மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆகையால் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை விரைந்து கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை காவல்துறையினர் பெற்றுத் தர வேண்டும். அது மட்டுமின்றி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவர்கள் இழந்த நகைகள் மற்றும் பணத்தினை உடனடியாக பெற்று தருவதற்கான நடவடிக்கையை மாவட்ட காவல்துறையினர் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் வைக்கின்றனர்.