நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சயின்டிபிக் அதிகாரியாக கேரளாவைச் சேர்ந்த அசோகன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கூடங்குளத்தை அடுத்த செட்டிகுளம் அணுவிஜய் நகரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அசோகன் கடந்த 1 ஆம் தேதி கர்நாடக மாநிலம் கைகா அணுமின் நிலையத்திற்கு பணியிட மாறுதலாகி சென்றுவிட்டார். இந்த நிலையில்  செட்டிகுளம் அணுவிஜய் நகரத்தில் இருந்த அவரது வீட்டில் யாரும் இல்லாததால் பல நாட்களாக பூட்டி இருந்தது.  இதனை அறிந்த மர்ம நபர்கள் நேற்று காலை பூட்டிய வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டில் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து கூடங்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.




தகவலறிந்த இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அசோகனின் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து அசோகனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய காவல்துறையினர் பீரோவில் இருந்த பொருட்கள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது பீரோவில் 50 பவுண் நகைகள் வைத்திருந்ததாக அசோகன் தெரிவித்துள்ளார். அதனை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கூடங்குளம் காவல்துறையினர் மர்ம  நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும் அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




இதே போன்று செட்டிகுளம் அணுவிஜய் நகரத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி ராமன் என்பவர் ரஷ்யாவுக்கு சென்றுள்ள நிலையில் அவரது வீடும் பூட்டப்பட்டிருந்தது. இதனை அறிந்த மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்து கொள்ளை  முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் அங்கு நகை, பணம் எதுவும் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். அதிகாரிகள் வசிக்கும் பாதுகாப்பு மிக்க பகுதியில் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 50 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.