புதுச்சேரி : ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக கூறி ரூ.90 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். மற்றொரு மோசடியில் ஒருவர் சிக்கினார். புதுச்சேரி கோரிமேட்டை சேர்ந்தவர் லூர்து பெலிக்ஸ் (வயது 38). இவருக்கு சங்கரன்பேட்டை காமன்கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர் (31) என்பவர் அறிமுகம் ஆனார். ராஜசேகர் தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும், அதற்கு பணம் கொடுத்தால் கூடுதல் பணம் தருவதாகவும் கூறியுள்ளார். 


இதை உண்மை என்று நம்பிய லூர்துபெலிக்ஸ் தனது பணம் மற்றும் தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து ரூ.43 லட்சம் ரொக்கம் மற்றும் 15 சவரன் நகைகளை ராஜசேகரிடம் கொடுத்துள்ளார். ஆனால் வாக்குறுதி அளித்ததுபோல் கூடுதல் பணம் தராததுடன் ராஜசேகர் தலைமறைவானார். இதுதொடர்பாக லூர்துபெலிக்ஸ் போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து குற்றப்புலனாய்வு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா உத்தரவின்பேரில் போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு, நியூட்டன், ஏழுமலை, கார்த்திகேயன் மற்றும் போலீசார் ராஜசேகரை வலைவீசி தேடிவந்தனர்.


 இந்தநிலையில் ராஜசேகர் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது மோசடி செய்த பணத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும், கார், டி.வி., ஏ.சி., என வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ராஜசேகரிடம் இருந்து கார், 13 பவுன் நகைகள், ஏ.சி., டி.வி., பாஸ்போர்ட் மற்றும் பல்வேறு வங்கிகளின் காசோலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி:


புதுவையை சேர்ந்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.45½ லட்சம் மோசடி செய்ததாக தஞ்சாவூரை சேர்ந்த தாய், மகனான நாகம்மை, பிரபாகரன் ஆகியோரை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகம்மை கைது செய்யப்பட்டார். அவரது மகன் பிரபாகரன் கொல்கத்தாவுக்கு தப்பியோடி விட்டார். இதைத்தொடர்ந்து கொல்கத்தா சென்ற சி.ஐ.டி. போலீசார் பிரபாகரனை கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர். அவரிடமிருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், லேப்டாப், 10 மொபைல் போன்கள், போலி முத்திரைகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.