ஆட்டோ ஓட்டுநர் மூவேந்தரை கைது செய்ய முயன்ற போது, சார்பு ஆய்வாளர் மாரி கண்ணன் என்பவரை கையில் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றபோது, மூவேந்தரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
சிறப்பு காவலர் எரித்துக் கொலை
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே முக்குளம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்த மலையரசன் (36). இவர், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தனிப்படை காவலராக 10 ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார். இவருக்கு பாண்டிச் செல்வி (33) என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு குழந்தைகளுடன் காவலர் குடியிருப்பில் வசித்துவந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் பைக் விபத்தில் பாண்டிச் செல்வி உயிரிழந்தார். இந்த சூழலில் மனைவி உயிரிழந்த சோகத்தில் பணியிலிருந்து சில நாட்கள் அனுமதி விடுமுறையில் இருந்துவந்துள்ளார். இந்த சூழலில், மலையரசனை காணவில்லை என உறவினர்கள் தேடிவந்தனர்.
போலீஸ் விசாரணை
இதனையடுத்து அவர் எங்கு சென்றார்.? என்பது தெரியாத நிலையில், தனிப்படை காவலரான மலையரசனின் நிலைகுறித்து தெரிந்துள்ளது. மதுரை விமான நிலையம் அருகே உள்ள ஈச்சனேரி பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில் காவலர் உடல் கிடப்பதாக காவல்துறையினருக்கு தெரிந்தது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பெருங்குடி காவல்துறையினர் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மலையரசன் கொலை செய்யப்பட்டாரா.? தற்கொலையா.? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இந்தநிலையில் காவலர் மலையரசன் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் வில்லாபுரத்தை சேர்ந்த மூவேந்தர் என்ற ஆட்டோ ஓட்டுனரை துப்பாக்கியால் காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர். பணத்திற்காக எரித்துகொன்றதாக ஆட்டோ ஓட்டுநர் மூவேந்தர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆட்டோ ஓட்டுநருடன் காவலர் நட்பு?
காவலர் மலையரசனுக்கும் - ஆட்டோ ஓட்டுநர் மலையரசனுக்கும், நட்பு ஏற்பட்டதாக தெரியவருகிறது. ஆட்டோவில் காவலர் சவாரி சென்றபோது, ஏற்பட்ட பழக்கத்தில் இருவரும் சேர்ந்து பெருங்குடி அருகே பைபாஸ் சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. அப்போது காவலர் மலையரசனிடம் பணத்தை பறித்த போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலரை தலையில் பலமாக அடித்து ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்துவிட்டு, பின்னர் எரித்து பெருங்குடி அருகே வீசி சென்றதும் தெரியவந்துள்ளது.
துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது
இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் மூவேந்தரை கைது செய்ய முயன்ற போது சார்பு ஆய்வாளர் மாரி கண்ணன் என்பவரை கையில் வெட்டிவிட்டு தப்பிவிடும் என்றபோது மூவேந்தரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து மூவேந்தர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் காயமடைந்த சார்பு ஆய்வாளர் மாரிக்கண்ணனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவலர் கொலையில் திருப்பம் குறித்து போலீஸ் முழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Ramzan Special Trains: தென் மாவட்ட மக்களே... ரம்ஜானுக்கு ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில் முன்பதிவு துவங்கியாச்சு !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ