Crime: உத்தரபிரதேசத்தில் இரண்டு பெண்கள் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 சிறுமிகளின் சடலங்கள் மீட்பு:
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் கோட்வாலி பகுதியில் உள்ள, ஒரு கிராமத்தில் 16 வயது மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் மது அருந்த வற்புறுத்தப்பட்டதாகவும், பின்னர் உள்ளூர் ஒப்பந்ததாரரின் 18 வயது மகன் மற்றும் 19 வயது மருமகனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்பந்ததாரர் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கூட்டு பலாத்காரம் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன சிறுமிகள் மரணம்:
சம்பவம் தொடர்பாக பேசும் குடும்பத்தினர், “புதன்கிழமை மாலையில் சிறுமிகள் விளையாடுவதற்காக வயல்வெளிக்கு சென்றனர். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் அவர்களை தேடி சென்றனர். அப்போது, மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில், இருவரும் மீட்கப்பட்டனர்.
சிறுமிகளை வலுக்கட்டாயமாக மது அருந்தச் செய்து, பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ பதிவுகளை எடுத்து வைத்துக் கொண்டு, சிறுமிகளை மிரட்டியுள்ளனர். இதனால், ஏற்பட்ட அவமானம் மற்றும் காயங்கள் காரணமாகவே சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்” என காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.
உறவினர்களால் நேர்ந்த கொடூரம்:
சம்பவம் தொடர்பாக பேசிய காவல்துறையினர், “இரண்டு சிறுமிகளும் அவர்களது குடும்பத்தினரும் ஒப்பந்ததாரரால் நடத்தப்படும் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில்தான் தூரத்து உறவினர்களான செங்கல் சூளை ஒப்பந்ததாரர் ராம்ரூப் நிஷாத் (48), அவரது மகன் ராஜு (18), மருமகன் சஞ்சய் (19) ஆகியோரால் அந்த சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்.
அவர்களின் உடல்கள் அந்த சூளையிலிருந்து 400 மீட்டர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. சிறுமிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தடயவியல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறியவும், கூட்டு பலாத்கார குற்றச்சாட்டுகளை சரிபார்க்கவும் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களின் மொபைல் போன்களில் இருந்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மீட்கப்பட்டு, அவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளனர்.