Crime: மது குடிக்க பணம் தராத மனைவியை, கணவர் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாத நபர்களை விட தெரிந்த நபர்கள் தான் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, வட மாநிலங்களில் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்கள்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது ஒரு சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. 


மது குடிக்க பணம் தராத மனைவி:


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் மொய்தினுதின் அன்சாரி (42). இவரது மனைவி பர்வீன் (26). இவர்களுக்கு 2005ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  இவர்கள் மால்வானி என்று பகுதியில் உறவினர்களுடன் வசித்து வந்துள்ளனர். கணவன் மொய்தினுதின் அன்சாரி வேலைக்கு செல்லாமல், மதுவுக்கு அடியாகி இருந்துள்ளதாக தெரிகிறது. எனவே, இவரது மனைவி பர்வீன் வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து கொண்டு வந்திருந்தார்.


மதுவுக்கு அடிமையான அன்சாரி, அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு மனைவியை டார்ச்சர் செய்து வந்திருந்தாக சொல்லப்படுகிறது. இதனால், இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் சண்டை போட்டுள்ளார் கணவன் அன்சாரி. இதனால், இருவருக்கு வாக்குவாதம் நீடித்த நிலையில், மனைவியை கொடூரமாக அடித்துள்ளார். மூங்கில் குச்சியால் அடித்ததில் மனைவி பர்வீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மனைவியின் உடலை என்ன செய்வது என்று தெரியாமல், கோரேகான் கிழக்கில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகில் போட்டுள்ளார். பின்னர், அடுத்த நாள் காலை அக்கம் பக்கத்தினர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


அடித்தே கொன்ற கணவன்:


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, கொடூரமாக குச்சியால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், துப்பு கிடைத்தது.


இதில், மனைவியை கொன்று விட்டு, கணவன் அன்சாரி  தப்பியோடியது தெரியவந்தது. இவரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், மலாட் பகுதியில் அன்சாரியை கைது செய்தனர்.  அப்போது, மனைவியை கொலை செய்ததை அன்சாரி ஒப்புக் கொண்டதை அடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மது குடிக்க பணம் தராத மனைவியை, கணவர் அடித்தே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


UP Accident: லாரி மீது கார் மோதி விபத்து - தீயில் கருகி 8 பேர் உயிரிழப்பு! உ.பி.யில் பயங்கர சோகம்!