தெற்கு மும்பையில் உள்ள ஒரு பெண் விடுதியின் காவலாளியான 30 வயது நபர், 18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. எனினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது உறுதி செய்ய முடியும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


18 வயது பெண் கழுத்தை நெரித்து கொலை:


தெற்கு மும்பையில் உள்ள ஜிம்கானாவுக்கு அருகில் அமைந்துள்ள மாநில அரசால் நடத்தப்படும் சாவித்ரிபாய் புலே மகளிர் விடுதியில் அகோலாவை சேர்ந்த 18 வயது பெண் தங்கி உள்ளூர் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். மேலும், தனது குடும்ப சூழ்நிலைக்காக மாலை நேரங்களில் இவர் பகுதி நேர வேலை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 


நீண்ட நாட்களாக விடுதியில் தங்கி இருக்கும் இவர், நான்காவது மாடியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இந்த பெண் காணாமல் போனதாக, காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், நேற்று மாலை பிற்பகல் முதல் நான்காவது மாடியில் உள்ள அவரது விடுதி அறை வெளியில் இருந்து பூட்டப்பட்ட அறைக்குள் நிர்வாண சடலமாக காணப்பட்டார். இதையடுத்து, பூட்டை உடைத்து கழுத்தியில் துப்பட்டா சுற்றப்பட்ட நிலையில் மீட்டனர். 


தொடர்ந்து கூடுதல் கமிஷனர் தேஷ்முக் உத்தரவின் பேரில் மரைன் டிரைவ் இன்பெக்டர் நிலேஷ் பாகுல் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. விசாரணையில், அந்த விடுதியின் காவலாளியான பிரகாஷ் கனோஜியா திங்கட்கிழமை இரவு முதல் காணாமல் போனது காவல்துறைக்கு சந்தேகத்தை கிளப்பியது. மேலும், ஹாஸ்டல் சிசிடிவி கேமராவில் கனோஜியா நேற்று அதிகாலை 5.55 மணிக்கு மெயின் கேட் செக்யூரிட்டி கேபின் அருகே துணி மூட்டையை வைத்துவிட்டு வெளியே செல்வது பதிவாகியுள்ளது. 


பாலியல் வன்கொடுமையா? 


ஹாஸ்டல் தண்ணீர் வசதிக்கான பொறுப்பாளராக அந்த பெண் இருந்ததால் மொட்டை மாடியின் சாவின் அவரிடம் இருந்துள்ளது. அப்போது, செவ்வாய்க்கிழமை மாலை ஹாஸ்டல் அதிகாரிகள் அந்த பெண்ணின் அறையை தட்டியுள்ளளர். நீண்ட நேரமாக தட்டி கதவை திறக்காததால், ஜன்னல் வழியாக அறைக்குள் சென்று பார்த்தபோது, இரண்டு படுக்கைகளுக்கு நடுவே தரையில் அந்த பெண் நிர்வாணமாக கிடந்துள்ளார். 


குடும்பத்திற்கு ஒரே பெண்ணான இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த திங்கள்கிழமை இரவு 11. 30 மணியளவில் விடுதி தோழி ஒருவரிடம் கடைசியாக பேசிவிட்டு தனது அறைக்கு சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணின் அறைக்குள் புகுந்த கனோஜியா திங்கள்கிழமை இரவு 11.30 மணி முதல் செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி வரை அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, எங்கே போலீஸில் மாட்டிவிடுவோம் என்ற பயத்தில் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.


தொடர்ந்து, கனோஜியா சிக்கிவிடுவோம் என்ற பயத்தில் அதிகாலை 5 மணியளவில் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கனோஜியா கடந்த சில ஆண்டுகளாக விடுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும், கனோஜியா விடுதி அதிகாரிகளால் நேரடியாகப் பணியமர்த்தப்பட்டாரா அல்லது பாதுகாப்பு நிறுவனம் மூலம் பணியமர்த்தப்பட்டாரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். 


இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ இந்த வழக்கு தொடர்பாக நாங்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பிரிவின் கீழ் பதிவு செய்துள்ளோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பதை உறுதி செய்ய முடியும்.” என தெரிவித்தார்.