சென்னையில் தான் கேட்டும்  மது கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த குதிரை ஓட்டி பேக்கரி கடை ஊழியரை பீர் பாட்டிலால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். இதனால் காவல் துறையினர் குதிரை ஓட்டியை கைது செய்துள்ளனர். 


கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தினைச் சேர்ந்தவர் மோகன்  வயது 69. இவர், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் தினசரி வேலை முடிந்ததும், திருவல்லிக்கேணி பறக்கும் ரயில் நிலையத்தில் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அதே போல், கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 28) என்பவரும், மோகனுடன் ரயில் நிலையத்தில் தங்கி, மெரினாவில் குதிரை ஓட்டியாக வேலை செய்து வந்துள்ளார்.


இந்நிலையில், கடந்த ஜனவரி 2ம் தேதி மோகன் வேலைக்கு செல்லாமல், மது பாட்டில் வாங்கி வந்து குடித்து கொண்டு இருந்துள்ளார். அப்போது, குதிரை ஓட்டச்செல்லாமல் இருந்த மகேந்திரன் தனக்கும் மது கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் மோகன், தான் வாங்கி வந்திருக்கும் மது எனக்கே போதுமானதாக இருக்காது எனக் கூறி மகேந்திரனுக்கு மது  தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆரம்பத்தில் வாய்த்தகராறாக இருந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மகேந்திரன், கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் மோகன் தலையில்  ஓங்கி அடித்துள்ளார். தலையில் பலத்த காயம் அடைந்த மோகன்  ரத்த வெள்ளத்தில்  மயங்கி விழுந்துள்ளார்.


மோகன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்ததைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் மெரினா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த பேக்கரி ஊழியர் மோகனை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், போதையில் இருந்த மகேந்திரனை கைது செய்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மோகன்  சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். அதைதொடர்ந்து காவல் துறையினர் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.