Crime : சென்னையில் வேலையை விட்டு நீக்கியதால், தனியார் தொழில்நுட்ப நிறுவன அதிகாரியை கத்தியால் குத்திக் கொலை செய்த சக ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சென்னை : எழும்பூரில் தனியார் இன்டர்நெட் இணைப்பு வழங்கும் நிறுவனத்தில் பணி செய்வதில் ஏற்பட்ட தகராறில் அதிகாரியை ஊழியரே சுத்தியால் குத்தி படுகொலை செய்தார். தப்பி ஓடிய ஊழியரை போலீசார் பொது மக்கள் உதவியுடன் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சென்னை எழும்பூர் நெடுஞ்சாலையில் தனியார் இன்டர்நெட் இணைப்பு வழங்கும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு, வியாசர்பாடி கன்னிகாபுரத்தைச் சேர்ந்த விவேக் (30) என்பவர் கண்காணிப்பாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி தேவப்பிரியா மற்றும் ஒரு குழந்தை உள்ளது. தேவிப்பிரியா எழும்பூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்.


வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சந்தோஷ் (30), இவர், விவேக் பணியாற்றும் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்குள் வேலை செய்வதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் விவேக் தனது மனைவி தேவப்பிரியாவை எழும்பூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் விட்டுவிட்டு, தனது அலுவலகத்திற்கு வந்தார். உடன் பணியாற்றும் சந்தோசும் அலுவலகத்திற்கு வந்துள்ளார். பிறகு அலுவலகம் தொடர்பாக விவேக் மற்றும் சந்தோசுக்கு இடையே காலை 10.45 மணிக்கு திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.


அலுவலகத்திற்குள்ளேயே கடுமையாக தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த சந்தோஷ் அலுவலகத்தில் இருந்த வயர்கள் வெட்டும் கத்தியை எடுத்து விவேக்கை கொடூரமாக கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்தி உள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் விவேக் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். உடனே உடனிருந்தவர்கள் சந்தோஷை கட்டுப்படுத்த முயன்றனர். இதனால் அவர்களுக்கும் கத்திக்குத்து விழுந்தது. ஒரு கட்டத்தில் சந்தோஷ் விடாமல் விவேக்கை கத்தியால் குத்தியதால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சந்தோஷ் நிறுவனத்தின் மாடியில் ஏறி கட்டிடம் விட்டு கட்டிடம் தாவி குதித்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து இன்டர்நெட் நிறுவன ஊழியர்கள் அளித்த புகாரின்படி, எழும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவேக் உடலை மீட்டு,  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை நடந்த இடத்திற்கு போலீசார் மோப்ப நாயுடன் வந்து ஆய்வு செய்தனர். பிறகு தப்பி ஓடிய சந்தோஷை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் சிறிது நேரத்திலேயே பிடித்து கைது செய்தனர். 


பின்பு இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, கடந்த 3 மாதத்திற்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது.  பின்பு, விவேக் பரிந்துரைப்படி தனியார் நிறுவன உயர் அதிகாரிகள் சந்தோஷை பணியில் இருந்து நீக்கி உள்ளனர். அதற்கு விவேக்தான் காரணம் என சந்தோஷ் தனது நண்பர்களிடம் கூறி வந்துள்ளார். பின்னர் ஒரு வழியாக மீண்டும் கடந்த வாரம் தான் சந்தோஷ்  இன்டர்நெட் இணைப்பு வழங்கும் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். பணியில் சேர்ந்தது முதல் விவேக்கிற்கும் சந்தோஷிற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.


அதன்படி, நேற்று ஒரு நிறுவனத்திற்கு இன்டர் நெட் இணைப்பு வழங்குவது தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது மீண்டும் பணியில் இருந்து நீக்கி விடுவேன் என்று ஆபாசமாக விவேக் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், விவேக்கை படுகொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.