செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமட்டுநல்லூர், பகவதிபுரம் துங்கபத்ரா நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (41). இவர் அதிமுகவில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி இணைச் செயலாளராக உள்ளார் இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளன. இதில் செந்தில்குமார் ஏற்கனவே காஞ்சிபுரத்தில் குடியிருந்தபோது கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் செய்து வந்தார். அப்போது இவருக்கும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் பகுதியில் பிரபல தாதாவாக இருந்த ஸ்ரீதர் என்பவருடன் செந்திலுக்கு நெருக்கமான தொடர்பு இருந்து வந்துள்ளது. ஸ்ரீதர் மறைந்த பிறகு செந்தில்குமார் காஞ்சிபுரத்திலிருந்து, இடம் பெயர்ந்து செங்கல்பட்டு பகுதியில் குடியேறியுள்ளார்.
சரமாரி வெட்டு..
மேலும் அப்பகுதியில் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலை தொடர்ந்து செய்து வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் செந்தில்குமார் தனது இரண்டு குழந்தைகளையும் பைக்கில் அழைத்துக்கொண்டு, காலை நந்திவரம் புத்துக்கோயில் எதிரே உள்ள எஸ்ஆர்எம் பள்ளியில் விட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பெருமாட்டுநல்லூர் கூட்ரோடு அருகிலுள்ள செல்வி நகரில் சென்று கொண்டிருந்தபோது அங்கே மறைந்து, இருந்த 4 பேர் கொண்ட கும்பல் செந்தில்குமாரை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். இதில் செந்தில்குமாருக்கு தலை, கழுத்து, முகம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரி வெட்டு விழுந்துள்ளது. இதில் செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதில் அக்கம்பக்கத்தினர் திரண்டு வருவதை கண்டதும் அந்த கும்பல் பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செந்தில்குமாரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
திடீர் திருப்பம்..
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் பிரபலமாக நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. நினைத்துப் பார்க்காத அளவில் ஒரு லட்ச ரூபாய்க்கு, பல ஆயிரம் ரூபாய் மாதம் வட்டி கிடைக்கும் என கூறி அந்த நிறுவனத்தில், காஞ்சிபுரம் பகுதியில் விஜயலஷ்மி என்பவர் முகவராக செயல்பட்டு வந்தார். இவர் அந்த பகுதியில் பொது மக்களிடம், கோடிக்கணக்கில் முதலீடு செய்து தலைமறைவாகியுள்ளார். விஜயலட்சுமி, உயிரிழந்த செந்திலின் உறவினர் ஆவார்.
செந்தில்குமார் விஜயலட்சுமி கூறிய ஆசை வார்த்தைகளில் நம்பி சுமார் 15 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை திருப்பி கேட்டு விஜயலட்சுமியை செந்தில்குமார் அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். குறிப்பாக அந்த கொலை முயற்சி சம்பவம் நடைபெறுவதற்கு, சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி இருந்த அம்பத்தூர் பகுதிக்கு சென்று தனது பணத்தை திரும்பி தருமாறு கேட்டுள்ளார். அப்போது விஜயலட்சுமி செந்தில் குமாரை மிரட்டி உள்ளார் . உடனடியாக அவசர உதவி எண் 100க்கு கால் செய்து காவலர்களின் உதவியுடன் செந்தில்குமார் அங்கிருந்து திரும்பி வந்துள்ளார். இந்த நிலையில் தான் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதால் காவல்துறையினரின் சந்தேகம் விஜயலட்சுமி மீது திரும்பியது, இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் விஜயலட்சுமியை கைது செய்து காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி இது போன்ற நிறுவனங்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் முகவர்கள் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்பொழுது கொலைச் சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.