நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 12வது பட்டாலியன் போலீஸ் கமாண்டண்டாக பணியாற்றுபவர் கார்த்திகேயன். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் மூலம் குறுந்தகவல் வந்துள்ளது. அதில் தமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு பரிசுக்கூப்பன் விழுந்திருப்பதாகவும் அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் எனவும் தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு பெயர் மற்றும் புகைப்படத்துடன் தகவல் வந்துள்ளது. மேலும் இந்த தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் பல லட்ச ரூபாய் பரிசாக அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
இதனை உண்மை என நம்பிய கார்த்திகேயன் தனது வங்கி கணக்கில் இருந்து முன்பணமாக சிறிது தொகையை அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து மீண்டும் அதே குறுந்தகவல் வாட்ஸ் அப் மூலம் வந்துள்ளது. மேல் அதிகாரி தான் அனுப்புகிறார் என எண்ணிய கார்த்திகேயன் அவ்வப்போது 7 அரை லட்சம் வரை வங்கிக் கணக்கில் இருந்து அனுப்பி உள்ளார். மீண்டும் மீண்டும் என 10 முறைக்கு மேல் அதே குறுந்தகவல் வந்து கொண்டிருப்பதை கண்டு ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்த அவர் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் மூலம் அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்து பார்த்துள்ளார். அப்போது தான் அவருக்கு அதிர்ச்சி காந்திருந்தது. அவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவல் பொய்யானது என்றும் தமிழக டிஜிபியின் செல்போன் எண் அது இல்லை எனவும் தெரிய வந்துள்ளது. அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்திக்கேயன் இது குறித்து மாவட்ட சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தார்.
அதன்படி வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்த ஆன்லைன் மோசடி குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டனர். குறிப்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராஜ், சப் இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. நவீன தொழில் நுட்ப உதவிகளுடன் வெளி மாநிலங்களுக்கும் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு இருவர் செல்போன் சிம் கார்டு வாங்கி கொடுத்து உதவியது தெரியவந்தது, அதன்படி ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த முரளி (32) மற்றும் வினைகுமார் (38) ஆகிய இருவரை காவல்துரையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து செல்போன், சிம்கார்டு, ஆதார் அட்டை போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறுந்தகவல், ஏடிஎம் கார்டு மோசடி, ஓடிபி கேட்பது, வங்கி மோசடி என ஆன்லைன் மூலம் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வரும் சூழலில் பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களை யாருக்கும் வழங்கக்கூடாது, அதே போல ஆன்லைன் மூலம் வரும் தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என காவல்துறையினரே பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சூழலில் அதனை நம்பி காவலர் ஒருவரே ஏழரை லட்சத்தை இழந்திருப்பது பெரும் ஆச்சரியத்தையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.