மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரின் 4 வயது சிறுமியை கழுத்தை நெரிந்து கொன்ற கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த 4 வயது சிறுமியை கொன்றவர் வேறு யாருமல்ல, சிறுமியின் தாய்தான் என்றால் உங்களால் நம்பமுடியுமா? ஆனால், அதுதான் உண்மை. 


கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தான் பெற்ற 4 வயது மகளை கழுத்தை நெரிந்து கொன்றுள்ளார். அதன் பின்னர், அந்த பெண் இறந்த குழந்தையின் உடலை என்ன செய்வது என்று தெரியாமல் நான்கு கிலோ மீட்டர் தூக்கி சுற்றிய கொடுமையும் நடந்துள்ளது. 


இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தெரிவிக்கையில், “ இந்த கொலையானது நாக்பூரை அடுத்த எம்.ஐ.டி.சி காவல் நிலையப் பகுதியில் கடந்த திங்கள் கிழமை நடந்துள்ளது. இதுபற்றி கொலை செய்த தாயே காவலர்களுக்கு தகவல் கொடுத்திருப்பதுதான் ஆச்சரியமான விஷயம். சிறுமியை கொலை செய்தபின் நாக்பூர் நகரின் தெருக்களில் 4 கிலோமீட்டர் தூரம் தன் மகளின் பிணத்தை தூக்கி கொண்டு சுற்றி திரிந்துள்ளார்.” என தெரிவித்தனர். 


என்ன நடந்தது..? முழு விவரம் இதோ:


4 வயது தனது மகளை கொலை செய்த பெண்ணின் பெயர் ட்விங்கிள் ரவுத். இவருக்கு தற்போது 23 வயதாகிறது. இவரது கணவர் ராம் லக்‌ஷ்மண் (24) ஆகியோர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த கையோடு வேலை தேடி நாக்பூருக்கு வந்துள்ளனர். அதன்பின்னர், இருவரும் காகித தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து எம்.ஐ.டி.சி பகுதியில் உள்ள ஹிங்னா சாலையில் உள்ள நிறுவன வளாகத்தில் உள்ள அறையில் வசித்து வந்தனர். 


நீண்ட நாட்களாக இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக   திருமண உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் ஒருவருக்கு மேல் ஒருவர் கொண்ட சந்தேகத்தின் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த திங்கள் கிழமை மாலை 4 மணியளவில் தம்பதியர் மீண்டும் சண்டையிட்டுள்ளனர். இருவருக்கும் இடையேயான கடும் வாக்குவாதத்திற்கு இடையே இவர்களது 4வது வயது மகள் அழ தொடங்கியுள்ளார். 


இதனால் கோபமடைந்த அந்த பெண், தனது மகளை வீட்டிற்கு வெளியே அழைத்துசென்று, அங்குள்ள மரத்தடியில் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் தனது மகளின் சடலத்துடன் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றார். இரவு எட்டு மணியளவில், அந்த பெண் போலீஸ் ரோந்து வாகனத்தை பார்த்து, பின்னர் தானே அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி காவல்துறையினருக்கு சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். 


இதைகேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடனே சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தனது சொந்த மகளை கொலை செய்த ட்விங்கிள் ரவுத்தை காவல்துறையினர் கைது செய்து, இந்திய தண்டனைச் ச்ட்டம் பிரிவு 302 (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பெண், வருகின்ற மே 24ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டனர்.