அடகு வைத்த நகைகளை மீட்டு வியாபாரியிடம் ஒப்படைக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை காய்கறி தோட்டம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(வயது 42). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனாவுக்கு முன்பு தனக்கு சொந்தமான 1 கோடி மதிப்புள்ள 246 பவுன் தங்கநகைகளை பாளையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்துள்ளார். ஆனால் அதன்பின்னர் கொரோனா பரவலால் காய்கறி வியாபாரம் மந்தமாகி உள்ளது. இதனால் தான் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் திணறி வந்துள்ளார். இதனால் ரமேஷ்குமார் பாளை கே.டி.சி.நகர் பாலீன் தோட்டத்தை சேர்ந்த கோமதிநாயகம்(41) என்பவரிடம் சென்று நகைகளை திருப்புவதற்கு பண உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். உடனே கோமதி நாயகம் அடகு வைத்திருந்த நகைகளை திருப்பி ரமேஷ்குமாரிடம் கொடுக்காமல் வைத்துள்ளார். ரமேஷ்குமார் பணத்தை ரெடி செய்துவிட்டு நகைகளை கேட்டுள்ளார். அப்போதும் நகைகளை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். ரமேஷ்குமார் தொடர்ந்து நகைகளை கேட்டும் கொடுக்க மறுத்து வந்துள்ளார்.
கோமதிநாயகத்தின் சகோதரர் கண்ணையா தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கோமதி நாயகம் கண்ணையாவிடம் இந்த பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார். உடனே அவர் ரமேஷ்குமாரை அழைத்து நகை அடகு வைத்ததற்கான பணத்தை மற்றும் பெற்றுக்கொள், நகைகளை திருப்பி கேட்கக்கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனால் மனவேதனை அடைந்த ரமேஷ்குமார் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் மனு அளித்துள்ளார். அவரது உத்தரவின்பேரில் ஐகிரவுண்டு போலீசார் நடத்திய விசாரணையில், 246 பவுன் நகையை வங்கியில் இருந்து திருப்பி வைத்துக்கொண்டு அடகு வைத்த தொகையை மட்டும் திருப்பி தருவோம் என்று சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது சகோதரர் மிரட்டியது தெரியவந்ததுள்ளது.
இதையடுத்து சுமார் 1 கோடி மதிப்பிலான தங்கநகைகளை மோசடி செய்து அபகரித்ததாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அடகு வைத்த நகைகளை மீட்டு வியாபாரியிடம் ஒப்படைக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..