சீர்காழி அருகே அலையாத்தி காட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான சாராய ஊரல்களை புதுப்பட்டினம் போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி முழு ஊரடங்கு பிறப்பித்தது, மருந்தகங்கள், உணவகம், பால் கடைகள் தவிர்த்து வேறு எந்த ஒரு கடைகளும் திறக்கக்கூடாது அனுமதி மறுத்துள்ளது. குறிப்பாக அரசு கடையான டாஸ்மாக் கடை இயங்கவும் தடை விதித்துள்ளது. இதனால் மது பிரியர்கள் கடந்த சில வாரங்களாக மது அருந்தாமல் அதற்காக ஏங்கித்தவிக்கும் சூழல் நிலவி வருகிறது.
குறிப்பாக மதுவிற்கு அடிமையானவர்கள் பலர் எவ்வாறாவது தங்களை மதுபோதையில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மதுபான கடைகளில் சுவர்களில் ஓட்டை போட்டு மது பாட்டில்களை திருடுவதும், கள்ளச்சாராய தங்கையும் நாடி வருகின்றனர். இதனை பயன்படுத்திக்கொண்ட கள்ளச்சாராய வியாபாரிகள் தற்போது பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், விற்பனையில் ஈடுபடுவதுமாய் உள்ளனர். அதுமட்டுமின்றி அருகிலுள்ள புதுச்சேரி மாநிலம் மாவட்டம் காரைக்காலில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபடுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொடியம்பாளையம் தீவு கிராமம் கோட்டைமேடு பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் சிலர் சாராய ஊறல் போட்டு இருப்பதாக மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவுக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் புதுப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா தலைமையிலான காவல்துறையினர் அங்கு நேரில் சென்று ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது கோட்டைமேடு பகுதியில் உள்ள அலையாத்தி காடுகள் நடுவே சாராய ஊரல்கள் மறைத்து வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதனையடுத்து அவற்றை கைப்பற்றிய காவல்துறையினர் அதனை கீழே ஊற்றி அழித்தனர்.
மேலும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்ட சாராய ஊரல்கள் மதிப்பு சுமார் 1லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக புதுப்பட்டினம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இதில் சம்பந்தப்பட்ட தலைமறைவுள்ள குற்றவாளியான தென்னம்பட்டினம் தமிழ்ச்செல்வன் என்பவரை தேடிவருகின்றனர். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டும் நபர்கள் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பாண்டிச்சேரியை சேர்ந்த வெளிமாநில மதுபானங்களும், கள்ளச்சாராயம் விற்பனையும் பல்லாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதனை காவல்துறையினர் சரிவர கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், இனிவரும் காலங்களிலாவது மாவட்ட எல்லைகளில் உரிய முறையில் சோதனை செய்து வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் மதுபானங்களை தடை செய்ய வேண்டும், உள்ளூர்களில் மறைமுகமாக விற்பனை செய்யப்படும் சாராய விற்பனையும் கண்காணித்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.