கேரளாவில் கணவன், மனைவிகளை மாற்றி இன்பம் காணும் கும்பல் குறித்து போலீசிடம் புகாரளித்த பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தியாவையே அதிர வைத்த சம்பவம் 


கடந்த ஜனவரி மாதம்  கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர்  அங்குள்ள காவல் நிலையத்தில் திடுக்கிடும் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது கணவர் தம்பதிகளை மாற்றி இன்பம் அனுபவிக்கும் கும்பல் நடத்தி வரும் சமூக வலைத்தளக்குழுவில் உறுப்பினராக உள்ளார் என்று, தன்னை மற்றொருவருடன் உல்லாசம் அனுபவிக்க வற்புறுத்துகிறார் என்றும் கூறியிருந்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியான தகவல் வெளியானது. 


அதாவது கேரளாவைச் சேர்ந்த சிலர் இதுபோன்று தம்பதிகளை மாற்றிக் கொண்டு உல்லாசம் அனுபவிக்கும் குழுக்களை தொடங்கியுள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான தம்பதிகள் உறுப்பினராக இருந்துள்ளனர். Couples Meet  என பெயரிடப்பட்ட இந்த குழுவில் விருப்பத்தின் பேரிலும், கட்டாயத்தின் பேரிலும் தம்பதியினர் குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடுவார்கள். அங்கு ஆண், பெண் தங்கள் ஜோடிகளை மாற்றிக் கொள்வார்கள். இந்த தகவல் கேரளா மட்டுமின்றி இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போலீசாரின் விசாரணையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த குழுவில் இருப்பவர்கள் பற்றியும் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். 


கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்


இதற்கிடையில் தம்பதிகளை மாற்றிக் கொள்ளும் கும்பல் பற்றி போலீசில் புகார் கொடுத்த பெண் தன் கணவரை பிரிந்து கோட்டயம் பகுதியில் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவரது வீடு பூட்டிக் கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் கொண்ட அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அப்பெண் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 


சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்தவர் யார் என விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வந்த அப்பெண்ணின் உறவினர்கள் இந்த கொலைக்கு காரணம் அவரது கணவர் தான் என குற்றம் சாட்டினர். இதனால் சந்தேகத்தின் பேரில் கணவர் வீட்டுக்கு சென்ற போலீசாருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் வாயில் நுரை தள்ளியபடி அவர் மயங்கி கிடந்தார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.  மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை முயன்றாரா கணவர்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்து வருகின்றனர்.