கோவை உக்கடம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் இரவில் இரு சிறுவர்கள் சைக்கிளைத் திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, உக்கடம் அடுத்துள்ள அன்பு நகர், ரோஸ் அவன்யூ பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளைக் கண்ட இரண்டு சிறுவர்கள், யாரும் பார்க்கிறார்களா என நோட்டமிட்டப்படியே அங்கு நின்றிருந்த சைக்கிளை லாவகமாக திருடி சென்றனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களை சிறுவர்கள் திருடி செல்லும் காட்சியை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உக்கடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக இது போன்ற சிறு, சிறு திருட்டுகள் அதிகரித்து வருவதால், காவல்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் வீட்டின் வெளியே விடும் வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
