தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த சேகர் என்பவர், தமிழ்நாடு மின்வாரிய தலைவரும் நிர்வாக இயக்குனருமான ராஜேஷ் லக்கானி மற்றும் மின்வாரிய விஜிலன்ஸ் ஏடிஜிபி உள்ளிட்ட துறை சார்ந்த 6 உயர் அதிகாரிகளுக்கு சமீபத்தில் புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த மனுவில், 

கோவை டிஐஜிக்கு அபராதம்!

‛கோவை சிறை மற்றும் சீர்திருத்த துறையின் சரக துணைத் தலைவர் மற்றும் சிறை கண்காணிப்பாளர் வீடுகளில் முறைகேடு செய்து, அரசு கட்டணம் செலுத்தும் சிறை மின்சாரத்தை, தங்கள் வீடுகளுக்கு தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும். கோவை சிறை சரக துணை தலைவர் சண்முகசுந்தரம் குடியிருக்கும் அரசு வீட்டின் மின்சார இணைப்பு எண்: 030110031629 ல் இருந்து மின்சாரம் பயன்படுத்தாமல், சிறைக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தை அவரது வீட்டுக்கு பயன்படுத்தி, அவரது மின் இணைப்புக்கு எந்த கட்டணமும் இல்லாமல் பயன்படுத்தி வந்துள்ளார். அதிகாரி சண்முகசுந்தரம் வீட்டில் 5 ஏசிகள், 3 எல்இடி டிவி.,கள், 3 ப்ரிட்ஜ்கள், ஒரு மைக்ரோ ஓவன், 5 வாட்டர் மோட்டார்கள், கம்யூட்டர், ஹை பவர் சோடியல் விளக்குகள், கால்நடைகள் குளிப்பட்டும் மின் மோட்டர்கள் உள்ளன என நிறைய மின்பயன்பாட்டு சாதனங்கள் உள்ளன. இவை அனைத்திற்கும் சிறை மின்சாரமே பயன்படுத்தப்பட்டுள்ளது. 2008 ல் வழங்கப்பட்ட வீட்டு இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்க, பெயருக்கு குறைந்த அளவில் மின்கட்டணம் செலுத்தி இத்தனை நாள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நூதன மின் திருட்டு குறித்த ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று கோவை சிறை சரக துணைத் தலைவர் மீது அந்த மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். 

கோவை எஸ்.பி.,க்கு அபராதம்!

‛கோவை சிறைக் கண்காணிப்பாளராக உள்ள ஊர்மிளா குடியிருந்து வரும் அரசு வழங்கிய வீட்டின் மின்சார இணைப்பு எண்: 030110031630 ஆகும். அவரும் தனக்கான இணைப்பை பயன்படுத்தாமல் சிறை மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளார். அவரது வீட்டில் 3 ஏசிகள், 2 எல்இடி டிவிகள், 2 ப்ரிட்ஜ், மைக்ரோ ஓவன், 5 வாட்டர் மோட்டார்கள், கம்யூட்டர், ஹை பவர் சோடியம் விளக்குகள், கால்நடைகள், வாகனம் கழுவும் மோட்டார் போன்வற்றிக்கு சிறை மின்சாரத்தை பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் அவரது குடியிருப்புக்கான மின் கட்டணத்தை சேமித்துள்ளார். கடந்த 2021 டிசம்பர் மாதம், காவலர் வீட்டு வசதி வாரிய பணியாளர்கள் சிறையில் பணியாற்றிய போது, சிறையிலிருந்து எஸ்.பி.,ஊர்மிளா வீட்டிற்கு செல்லும் இணைப்பை துண்டித்துவிட்டனர் .இதனால் அந்த மாதம் மட்டும் 10426 ரூபாய் மின்கட்டணத்தை அவர் செலுத்த நேர்ந்தது. அதன் பின் அது சரிசெய்யப்பட்டு , சிறைமின்சாரமே பயன்படுத்தப்பட்டது. கோவை சிறை துறை எஸ்.பி., மீதான இந்த குற்றச்சாட்டுக்கு என்னிடம் போதிய ஆதாரம் உள்ளது’ என்றார். 

மதுரை டிஐஜி செலுத்திய அபராதம்!

மதுரை சிறை சரக துணைத்தலைவராக உள்ள பழனி குடியிருந்து வரும் வீட்டின் மின்சார இணைப்பு எண் 956. கடந்த 2006 ல் பெறப்பட்ட அந்த மின்இணைப்புக்கு, இதுவரை மிகக்குறைந்த மின்கட்டணமே செலுத்தப்படுகிறது. 2009 செப்டம்பர் 26 வரை மின் கட்டணம் நிலுவைத் தொகையாக 3655 ரூபாய் செலுத்தாத காரணத்தால்,  2019 அக்டோபர் 18 அன்று இணைப்பு துண்டிக்கப்பட்டது. 2009 முதல் நடப்பு வரை எந்த மின் கட்டணமும் செலுத்தவில்லை. அவரது வீட்டில் 5 ஏசிகள், 3 எல்இடி டிவிகள், 3 ப்ரிட்ஜ், மைக்ரோ ஓவன், 5 வாட்டர் மோட்டார்கள், கம்யூட்டர், ஹை பவர் சோடியம் விளக்குகள், கால்நடை குளிப்பாட்டும் மோட்டார்கள் என அனைத்தும் சிறை மின்சாரத்தை பயன்படுத்தியே உபயோகிக்கப்படுகிறது. மின் இணைப்பை இல்லாத குடியிருப்பில் இத்தனை பொருட்களை எப்படி பயன்படுத்த முடியும்? 

இதோ போன்று வேலூர் சிறை சரகத்திலும் பெரிய முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக ஆதாரங்கள் இணைத்துள்ளேன்,’’ என்று அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த புகார் குறித்து உடனடியாக மின்வாரிய விஜிலென்ஸ் ரெய்டு நடத்த உத்தரவிடப்பட்டு, புகார் தெரிவிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ததில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சிறை துறை டிஐஜி  சண்முகசுந்தரத்திற்கு 1 லட்சத்து 84 ஆயிரத்து 236 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த தொகையை அவர் செலுத்தியுள்ளார். அதே போல், கோவை சிறை துறை எஸ்.பி., ஊர்மிளாவுக்கு 7 லட்சத்து 40 ஆயிரத்து 402 ரூபாய் அபராதம் செலுத்தப்பட்டது. அதில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 201 ரூபாய் அபராத தொகை செலுத்தப்பட்ட நிலையில், 5 லட்சத்து 40 ஆயிரத்து 201 ரூபாய்  அபராதத் தொகை பாக்கியுள்ளது. அதே போல், மதுரையில் இணைப்பு துண்டிக்கப்பட்டு சிறை மின்சாரத்தை பயன்படுத்தியதால் ஏற்பட்ட இழப்பிற்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 845 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, சிறைத்துறை டிஐஜி பழனி அந்த தொகையை செலுத்தினார். 

உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்தியதும், ரெய்வு மூலம் அது அம்பலமானதும் தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.