USA Beach Serial Killer: அமெரிக்காவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்களை குறிவைத்து ரெக்ஸ் ஹியூர்மென் கொலை செய்து வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
பீச் சீரியல் கில்லர்..
அமெரிக்காவின் கில்கோ பகுதியில் அரங்கேறிய பல பெண்களின் கொடூர கொலைக்கு காரணமான ரெக்ஸ் ஹியூர்மென் பீச் சீரியல் கில்லர் என அறியப்படுகிறார். கடந்த 1993ம் ஆண்டு தொடங்கி 2010ம் ஆண்டு வரை என 17 ஆண்டுகளில் 8 பெண்களை கொடூரமாக கொலை செய்ததாகவும், அதில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்கள் எனவும் குற்றம்சாட்டப்பட்டார். இதுதொடர்பான வழக்கின் விசாரணை முடிவில் கட்டிடக்கலை நிபுணரான ரெக்ஸ் குற்றவாளி தான் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விசாரணையின் போது, பணம் தருவதாக உறுதியளித்து பெண்களை தனது இடத்திற்கு அழைத்துச் சென்று கழுத்தை நெறித்து கொன்றது தொடர்பாகவும், சில பெண்களின் உடல் உறுப்புகளை துண்டுகளாக வெட்டியது எப்படி எனவும் விளக்கமளித்து அதிர்ச்சி அளித்துள்ளார். அதன் பிறகு சாக்கில் உடலை வைத்து கில்கோ கடற்கரை போன்ற சில பகுதிகளில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது செயல்பாடு குறித்து தங்களுக்கு எதுவுமே தெரியாது என குடும்பத்தினர் பதிலளித்துள்ளனர்.
சீரியல் கில்லர் சிக்கியது எப்படி?
கடந்த 2010ம் ஆண்டில் மெலிசா பார்த்தெலெமி, மௌரீன் பிரெய்னார்ட்-பார்ன்ஸ், மேகன் வாட்டர்மேன் மற்றும் ஆம்பர் லின் காஸ்டெல்லோ ஆகிய நான்கு பெண்களின் உடல்கள் சணல் துணியில் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டபோது, இந்த வழக்கு தேசிய அளவில் கவனம் பெற்றது. மேன்ஹாட்டன் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பீட்சாவிலிருந்து கிடைத்த டிஎன்ஏ மாதிரியானது, கொலை செய்யப்பட்ட பெண்களின் ஒருவரது உடலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆண் முடியுடன் பொருந்தியது. விசாரணையில் அது ரெக்ஸ் என்பது தெரியவந்தது. இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, அவர் தனது கொலைகள் குறித்த விரிவான குறிப்புகளை தனது கணினியில் வைத்திருந்ததை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தலை மற்றும் கைகள் போன்ற பாகங்களை வெட்டி எடுப்பது, உடலின் உள்ளே உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கழுவுவது என மொத்த திட்டத்தையும் அதில் எழுதி வைத்திருந்தது திகிலூட்டியுள்ளது.
நீதிமன்றம் தீர்ப்பு
விசாரணையின் முடிவில், நமக்கு மத்தியிலேயே உலவும் ஒரு அரக்கனான ரெக்ஸ் குற்றவாளி என உறுதியானதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரெக்ஸிற்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை, அதைத் தொடர்ந்து மூன்று ஆயுள் தண்டனைகள், மற்றும் 25 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலான நான்கு தண்டனைகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கான தண்டனைத் தீர்ப்பு ஜூன் 17 அன்று வழங்கப்பட உள்ளது.
8 கொடூர கொலைகள் நிகழ்த்தப்பட்டது எப்படி?
- 1993 முதலாவதாக பலி சாண்ட்ரா கோஸ்டில்லா என்பவரை கழுத்தை நெரித்துக் கொன்று ரெக்ஸ் சவுத்தாம்ப்டனில் வீசினார்
- 1996ம் ஆண்டு மற்றொரு பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினார்
- 2000-ஆம் ஆண்டில் வலேரி மேக் என்பவரை கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி, அதன் பாகங்களை கில்கோ கடற்கரை மற்றும் மனோர்வில்லில் வீசியுள்ளான்
- 2003-ஆம் ஆண்டில் ஜெசிகா டெய்லர் என்பவரை கழுத்தை நெரித்துக் கொன்று, உடலைத் துண்டு துண்டாக வெட்டி கடற்கரையில் வீசியுள்ளான்
- 2007-ஆம் ஆண்டில் போலி தொலைபேசியைப் பயன்படுத்தி மெலிசா பிரைனார்ட்-பார்ன்ஸை வரவழைத்து, அவரைக் கொன்று, அவரது உடலை பெல்ட்களால் கட்டி கில்கோ கடற்கரையில் போட்டுள்ளான்
- 2009ம் ஆண்டு மௌரீன் பார்த்தெலெமி என்பவரை கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது உடலை டேப் மற்றும் சணல் துணியால் சுற்றி, கில்கோ கடற்கரையில் வீசியுள்ளான்
- 2010ம் ஆண்டு மேகன் வாட்டர்மேனை ஓட்டலில் இருந்து அழைத்துச் சென்று, அவரைக் கொன்று, உடலை சணல் துணியால் சுற்றிக் கடற்கரையில் போட்டுள்ளான்
- 2010ம் ஆண்டு ஆம்பர் காஸ்டெல்லோவைக் கொன்று, அவரது உடலை டேப் மற்றும் சணல் துணியால் சுற்றி, ஓஷன் பார்க்வே அருகே போட்டு சென்றுள்ளான்
மேற்சொன்ன அத்தனை கொலைகளையும் தனது வீட்டின் அடித்தளத்திலேயே செய்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
