சென்னை கோயம்பேடு நியூ காலனியை சேர்ந்தவர் தீபக் (34). இவரது மனைவி பூவரசி (30). இந்த தம்பதிக்கு தருண் (9) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பூவரசி தனது மகனுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். 

Continues below advertisement

போதைக்கு அடிமையான தமிழ்செல்வன்

இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த தமிழ்செல்வன் (35) என்பவருக்கும் பூவரசிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். போதைக்கு அடிமையான தமிழ்செல்வன் அவ்வப்போது   பூவரசியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்படி இருந்த போதிலும் அவ்வப்போது பூவரசியுடன் ஜாலியாக இருந்து விட்டு செல்வதை தமிழ்செல்வன் வழக்கமாக கொண்டுள்ளார். 

Continues below advertisement

சிறுவன் கொலை

நேற்று இரவும் வழக்கம் போல் பூவரசி வீட்டுக்கு தமிழ்செல்வன் வந்துள்ளார். அப்போது திடீரென பூவரசிக்கும், தமிழ்செல்வனுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பூவரசி கோபத்தில் வெளியே சென்றுவிட்டார். கடும் ஆத்திரத்தில் இருந்து வந்த தமிழ்செல்வன் தூங்கி கொண்டிருந்த பூவரசியின் மகன் தருணின் கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்துள்ளார். பின்னர் தமிழ்செல்வன் அங்கிருந்து தப்பித்துள்ளார். வெளியே சென்ற பூவரசி வீட்டுக்கு வந்தார். அங்கு மகன் தருண் இறந்து கிடந்ததை பார்த்து அலறியபடி கதறி அழுதுள்ளார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். 

தனிப்படை அமைத்து தேடுதல்

இந்த சம்பவம் தொடர்பாக  கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவன் தருண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் சிறுவன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலை செய்துவிட்டு தப்பியோடி தலைமறைவாக இருந்து வரும் தமிழ்ச்செல்வனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.