கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி கார்த்திக் மீது கோவை மத்திய சிறை வளாகத்தில் தாக்குதல் நடத்திய 5 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement

சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் கடந்த மே 22-ஆம் தேதி 10 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையின்போது காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கார்த்திக்கிற்கு வலது கை மற்றும் வலது காலில் காயம் ஏற்பட்டதால், அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்ததைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Continues below advertisement

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் கார்த்திக்கின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டதுடன், உடலின் பல பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து அவர் மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறை வார்டன் அளித்த புகாரின் பேரில், கைதிகள் நந்து என்கிற நவீன்குமார், ஜீவா என்கிற ஜீவானந்தம், மகாவீர் என்கிற மகாதேவன், கணேஷ் மற்றும் விஸ்வநாதன் ஆகிய 5 பேர் மீது பந்தய சாலை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்தில் தொடர்புடைய நவீன்குமார் வேலூர் மத்திய சிறைக்கும், ஜீவானந்தம் கடலூர் மத்திய சிறைக்கும், மகாதேவன் திருச்சி மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து பந்தய சாலை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.